கடனை முறையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை

கடன்களை அளவுடன் பெற்று முறையாகப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று நிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடனை முறையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை

கடன்களை அளவுடன் பெற்று முறையாகப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று நிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை பேசியது: மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் பொதுக்கடன் பெற்றுத்தான் மூலதனச் செலவினங்கள் உள்பட பிற செலவினங்களை மேற்கொள்கின்றன. கடன் பெறுவதும், அதனைத் திரும்பச் செலுத்துவதும் இயல்பானது.
ஆனால், கடன் மூலம் செலவுகள் மேற்கொள்ளும்போது, அந்தக் கடன் எதற்காக செலவிடப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். பெறப்படும் கடன் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக்கூடிய செலவினங்களில் மட்டும் செலவிடப்பட வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை, 2017-2018-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பெறப்படும் நிகரக் கடன் ரூ.41,965 கோடி. மூலதனச் செலவுகளுக்காக ரூ.27,789 கோடி, கடன்கள் செலுத்த ரூ.3,541 கோடி, மூலதன மானியங்களுக்காக ரூ.21,974 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெறப்படும் கடன் நிர்ணயிக்கப்பட்ட வரையறைக்குள் இருக்க வேண்டும்.
2016-ஆம் ஆண்டு இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி தமிழகத்தைவிட குறைவாகக் கடன் பெற்றுள்ளது சத்தீஸ்கர், ஒடிஸா, மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள்தான். மற்ற மாநிலங்களின் கடன் அளவு தமிழகத்தை விடக் கூடுதலாகும்.
வட்டி சுமையும், அதைச் செலுத்துதல் சரியான முறையில் தவறாது செலுத்தப்படுகிறதா என்பது இன்னொரு அளவுகோல். இதனைப் பொருத்தவரையிலும், நமது மாநிலம் இதுவரை எல்லாத் தவணைகளையும் உரிய நேரத்தில் செலுத்தி வந்துள்ளது.
எந்தத் தவறும் இல்லை: கடனை அளவோடு வாங்கி, முறையாகப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. பொருளாதார மந்த நிலை தொடர்வது ஒரு சவாலாகவே உள்ளது. கடன் அளவும், நிதிப் பற்றாக்குறையும் தொடர்ந்து வரையறைக்குள்ளாகவே கட்டுப்படுத்தப்படும்.
எனவே, மக்களிடையே தமிழகத்தின் பொதுக்கடன் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தனிநபர் கடன் உயர்ந்துவிட்டது எனக் கூறுபவர்கள் பிற மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
நிதிப்பற்றாக்குறை என்பது பெறப்படும் நிகர கடன் அளவைவிடக் குறைவாக இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை, 2011-2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை நிதிப்பற்றாக்குறை மூன்று சதவீத அளவிற்கு உட்பட்டே உள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் மட்டும் மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழ்நாடு இணைந்ததால் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் ரூ.22,815 கோடி கடனை அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கூடுதல் நிதி சுமையினால் 2016-2017 ஆம் ஆண்டில் மட்டும் நிதிப் பற்றாக்குறை உயர்ந்து 4.58 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், இது தாற்காலிகமானதுதான். மீண்டும் 2017-2018-ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறையின் அளவு மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 சதவீதமாகவே கட்டுப்படுத்தப்படும் என்றார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com