காவிரி: விவசாயிகள் பிரச்னைக்கு திமுகவே காரணம்- எடப்பாடி பழனிசாமி

காவிரி விவகாரத்தில் திமுக வேகமாகச் செயல்படாததால்தான் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
காவிரி: விவசாயிகள் பிரச்னைக்கு திமுகவே காரணம்- எடப்பாடி பழனிசாமி

காவிரி விவகாரத்தில் திமுக வேகமாகச் செயல்படாததால்தான் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: ஆளுநர் உரையில் லோக் ஆயுக்த நிறுவப்படும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு விரைவில் அமைக்கப்படும், கச்சத்தீவு மீட்கப்படும் என்றெல்லாம் கூறியிருந்தீர்கள். ஆனால், அதற்கான பணிகள் நடைபெறவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு 2007-இல் அளிக்கப்பட்டது. அப்போது மத்திய ஆட்சியில் திமுக இடம்பெற்றிருந்தது. அப்போதே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் இடம்பெறச் செய்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. அதன் பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் ஏற்கப்படாததால்தான் உச்சநீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி, இறுதித் தீர்ப்பு அரசிதழில் இடம்பெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகவும் இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் விவசாயிகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
துரைமுருகன் (திமுக): காவிரி நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது திமுக அரசு. தீர்ப்புப் பெற்றதும் நாங்கள்தான். இறுதித் தீர்ப்பு வந்த பிறகு, ஓராண்டு அந்தத் தீர்ப்பின்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மேல் முறையீட்டுக்கு நேரம் கொடுக்கப்படும். உங்கள் (அதிமுக) ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டபோது, அவர்கள் கண்காணிப்புக் குழுவை நியமித்தனர். நல்ல வழக்குரைஞர் வாதாடியதால், இந்த நிலை ஏற்பட்டது.
திமுக ஆட்சியில் காவிரி விவகாரத்தை எப்படி அணுகலாம் என்று ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினோம். அன்றைய கூட்டத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். நடுவர் மன்றம் சொல்வது இறுதித் தீர்ப்பு இல்லை. உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்றார். அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றத்தில் அதிமுக தீர்ப்பைப் பெற்றது என்பதை ஏற்கிறேன். அதனால் தண்ணீர் வந்துவிட்டதா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி: 2007-ஆம் ஆண்டே தீர்ப்பு வந்து விட்டது. அப்போதே, விரைவாக அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம். 2010-ஆம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சியில் இருந்தீர்களே? என்ன செய்தீர்கள்? தமிழகத்தில் இன்று விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதற்கு நீங்கள்தான் காரணம்.
(துரைமுருகன் பேசும்போது ஓ.பன்னீர்செல்வம் பெயரைக் குறிப்பிட்டதால் பேரவைத் தலைவர் தனபால் அவரைப் பேச அனுமதித்தார்.)
ஓ.பன்னீர்செல்வம்: காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு வந்த பிறகு நடந்த அனைத்துக்
கட்சிக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று நான் கூறியதாக துரைமுருகன் தெரிவித்தார். இறுதித் தீர்ப்பு வந்த பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழகம் கேட்டது 340 டிஎம்சி தண்ணீர். ஒதுக்கியது 185 டிஎம்சி. ஆகவே, மத்தியிலும் மாநிலத்திலும் திமுக அங்கம் வகிக்கும் அரசு இருக்கிறது. பெற்ற நீரை உறுதிப்படுத்த அரசாணை பெற்றுத் தர வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். அதற்குப் பிறகும் போதிய நீர் கிடைக்கவில்லை என்று சொல்லி உச்சநீதிமன்றம் சென்று வழக்குத் தொடருங்கள் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
அந்தக் கருத்தைத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் தெரிவித்தேன். உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று மனு அளிக்கவில்லை. இந்தக் கருத்தை வலியுறுத்தித்தான் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அது சொல்லப்பட்டது.
2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதினார். பலன் இல்லாததால், உச்ச நீதிமன்றத்தில் 2013-இல் வழக்குத் தொடர்ந்து, அரசாணை பெற்றுத் தந்தார். இதுதான் வரலாறு. எனவே, துரைமுருகன் தெரிவித்த கருத்தில் பிழை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com