மார்ச் 31ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும்: ராமதாஸ்

மார்ச் 31ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மார்ச் 31ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும்: ராமதாஸ்

மார்ச் 31ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பினாமி அரசு மக்கள்நலன் காக்கும் அரசு அல்ல... மது ஆலைகளின் நலன் காக்கும் அரசு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு மேலும் 8 மாதங்கள் அவகாசம் கோரியிருப்பதன் மூலம் அதன் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது. மதுக்கடை மூடலை தாமதப்படுத்தும் அரசின் திட்டம் கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்தக் கெடு முடிய இன்னும் சரியாக ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அதில் சில திருத்தங்களை செய்யக்கோரி மத்திய அரசும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் அகற்ற முடியாது என்றும், அதற்கான காலக்கெடுவை நவம்பர்28-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது. அத்துடன், மாநகராட்சிகள், நகராட்சிகள் தவிர மற்ற பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்றும்படி வலியுறுத்தக்கூடாது; அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் வரை மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்ற உத்தரவை தளர்த்தி 100 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசின் நிறுவனமான டாஸ்மாக் அதன் மனுவில் கூறியிருக்கிறது.

அதேபோல், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் உச்சநீதிமன்றத்தின் ஆணை மதுக்கடைகளுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், நெடுஞ்சாலைகளில் உள்ள விடுதிகளின் பார்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகள்  உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நோக்கத்தையே சிதைத்துவிடக் கூடியவை ஆகும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் காரணமாக அதிக எண்ணிக்கையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதால் தான் அவற்றைத் தவிர்க்கும் நோக்குடன் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று எனது அறிவுறுத்தலின் பேரில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.  

அதையேற்று தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற 2013-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றமும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும் என்று கடந்த திசம்பர் 15-ஆம் தேதி தீர்ப்பளித்தது. நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அகற்றுவதன் மூலம் வாகன ஓட்டிகள் மது அருந்த மாட்டார்கள்; அதனால் விபத்துக்களும், உயிரிழப்புகளும் குறையும் என்பது தான் இத்தீர்ப்பின் நோக்கம். இதற்கு மாறாக மாநகராட்சிகள், நகராட்சிகள் தவிர மற்ற பகுதிகளிலுள்ள நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்தலாம் என்று மாநில அரசும், நெடுஞ்சாலைகளில் உள்ள விடுதிகளின் பார்களில் மது குடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசும் கோருவது அபத்தமானதாகும். கிராமப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலையோர மதுக்கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டிவரும் ஓட்டிகளால் விபத்து ஏற்படாது என்றோ, நெடுஞ்சாலையோர விடுதிகளில் உள்ள பார்களில் வினியோகிக்கப்படும் மதுவகைகளால் போதை ஏறாது என்றோ மத்திய, மாநில அரசுகளால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?

கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 5 லட்சத்து 1423 சாலை விபத்துக்கள் நடந்ததாகவும், அவற்றில் ஒரு லட்சத்து 46,133 பேர் உயிரிழந்ததாகவும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் கூறியுள்ளது. சாலை விபத்துக்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. 2015-ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 69,059 விபத்துக்கள் நடந்ததாகவும், அவற்றில் 15,642 பேர் உயிரிழந்தாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாகவே சாலைவிபத்துக்களிலும், உயிரிழப்புகளிலும் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த அவலத்திலிருந்து தமிழகத்தை மீட்பதற்காக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி மாவட்ட நெடுஞ்சாலை மற்றும் கிராமசாலைகளில் உள்ள மதுக்கடைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தால் அது மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்திருக்கும்.

அதைவிடுத்து, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற  உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தளர்த்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கோருவது மது ஆலை அதிபர்கள் மற்றும் மதுக்கடை அதிபர்களின் நலனைக் காப்பதற்காகத் தானேயன்றி வேறு எதற்காகவும் அல்ல.‘‘இந்தியாவில் முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான விலையாக, இந்தியாவில் கல்வி வழங்க முடியாத நிலை ஏற்படுமானால் அதை ஏற்றுக் கொள்வேன்’’ என மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். எனவே, அனைத்துத் தேவைகளையும் விட முழுமதுவிலக்கு தான் முதன்மைத் தேவையாகும். இதை உணர்ந்து தமிழகத்தில் முழுமதுவிலககை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு முதல்கட்டமாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 2700 மதுக்கடைகளையும் வரும் 31-ஆம் தேதிக்குள் மூட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com