வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கும்பல் கைவரிசை: நெல்லை நகைக் கடையில் 37.5 கிலோ நகைகள் திருட்டு

பாளையங்கோட்டையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் உள்ள நகைக் கடையில், கதவில் துளையிட்டு 37.5 கிலோ தங்க நகைகளையும், ரூ.10 லட்சம் பணத்தையும்
பாளையங்கோட்டையில் நகைகள் திருடப்பட்ட கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள உருவங்கள்.
பாளையங்கோட்டையில் நகைகள் திருடப்பட்ட கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள உருவங்கள்.

பாளையங்கோட்டையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் உள்ள நகைக் கடையில், கதவில் துளையிட்டு 37.5 கிலோ தங்க நகைகளையும், ரூ.10 லட்சம் பணத்தையும் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் திருடிச் சென்றனர். இந்நிலையில், திருடப்பட்ட இந்த நகைகள் வேலூர் அருகே வெள்ளிக்கிழமை மாலை போலீஸாரால் மீட்கப்பட்டன. நகைகளை விட்டுவிட்டு தப்பி கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டை மகாராஜநகரைச் சேர்ந்தவர் பாபு. இவர் தன் சகோதரர்களுடன் இணைந்து நகைக் கடை நடத்தி வருகிறார். பாளையங்கோட்டை, கோவில்பட்டி, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிகளில் இந்தக் கடையின் கிளைகள் உள்ளன.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள நகைக் கடையில் ஊழியர்கள் வியாழக்கிழமை இரவு பணி முடிந்து பூட்டிச் சென்றனராம். வெள்ளிக்கிழமை காலையில் வந்து திறந்து பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருட்டுப் போனது தெரியவந்ததாம்.
கடையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டதும், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்ட சில பொருள்கள் அப்படியே இருந்ததும் தெரியவந்தது.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். தடய அறிவியல் நிபுணர்கள் கடையில் பதிவாகியிருந்த விரல் ரேகைகளைப் பதிவு செய்தனர். மோப்பநாய் ப்ளூட்டோ வரவழைக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் இரா.திருஞானம், துணை ஆணையர் பிரதீப்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது: மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கடையின் மொட்டை மாடி பகுதியில் உள்ள இரும்புக் கதவை காஸ் வெல்டிங் இயந்திரத்தால் துளையிட்டு, அதன்பின்பு இருந்த இரும்புத் தடுப்புகளையும் உடைத்து திருடர்கள் புகுந்துள்ளனர். அடுத்ததடுத்த கட்டடங்களில் இருந்து வருவதற்கு கொள்ளையர்கள் ஏணியைப் பயன்படுத்தியுள்ளனர்.
கட்டடத்துக்குள் புகுந்ததும் உள்ளே இருந்த கண்காணிப்புக் கேமராக்களின் இணைப்புகளைத் துண்டித்துள்ளனர்.
ஆனால், அதற்கு முன்பாக அவர்களின் உருவங்கள் கேமராவில் பதிவாகியுள்ளன. வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தாங்கள் கொண்டு வந்திருந்த பிரத்யேக பையில் நகைகளை அள்ளிச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
கடையில் இருந்த 37.5 கிலோ தங்கம், ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனதாகத் தெரிகிறது. நகைகள் மற்றும் பணத்தை கடையின் ஆவணங்களுடன் ஒப்பிட்டு மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு திருடர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கட்டுமானப் பணி உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலத்தவர்களைக் கணக்கெடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றனர்.
வேலூர் அருகே மீட்பு: இதற்கிடையே, வேலூர் மாவட்டம் காட்பாடி சோதனைச் சாவடியில், வெள்ளிக்கிழமை மாலையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு காரில் இருந்து இறங்கிய 4 பேர், போலீஸாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.
அந்த காரை போலீஸார் சோதனையிட்டபோது, அதில், தங்க நகைகள் மற்றும் பணம் இருப்பது தெரியவந்தது. வேலூரில் அந்த காரை வாடகைக்கு எடுத்த மர்ம நபர்கள், திருப்பதிக்கு செல்ல வேண்டுமெனக் கூறியதாக, கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட நகைகள், பாளையங்கோட்டை நகைக் கடையில் திருடப்பட்டவை எனத் தெரியவருகிறது.
இதுதொடர்பாக விசாரிப்பதற்காக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் வேலூர் விரைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com