வரி வருவாய் குறைந்தது ஏன்? நிதியமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்ததற்கான காரணங்களை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் விரிவாக விளக்கினார்.
வரி வருவாய் குறைந்தது ஏன்? நிதியமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்ததற்கான காரணங்களை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் விரிவாக விளக்கினார்.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பதில் உரை:
வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும்போது நிலவும் சூழ்நிலையையும், அந்த ஆண்டு ஏற்படவுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டுதான் வருவாய் மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன.
மாநில வரி வருவாய் வளர்ச்சி 2014-15-ஆம் ஆண்டில் 6.70 சதவீதமாகவும், 2015-16-ஆம் ஆண்டில் 2.31 சதவீதமாகவும் இருந்தது. 2011-12-ஆம் ஆண்டு முதல் 2015-16-ஆம் ஆண்டு வரை மாநில வரி வருவாய் 107 சதவீதம் வளர்ச்சியைக் கண்டது. பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரி வருவாய் குறைந்த பின்னரும் இந்த அளவு உயர்ந்துள்ளது. 2016-17-ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி 8.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2017-18-ஆம் ஆண்டில் மேலும் உயரும்.
வரி வருவாய் குறைவு: வணிக வரி, மாநில கலால் வரி, முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு மீதான வரி, வாகனங்கள் மீதான வரி மற்றும் நிலவரி போன்றவையே மாநில அரசின் வரி வருவாய் ஆதாரங்கள். தமிழக அரசின் வரி வருவாயில், 70 சதவீதத்துக்கும் மேலாக வணிக வரியிலிருந்துதான் கிடைக்கிறது. இது தவிர கனிமக் கட்டணம், வட்டி, உள்கட்டமைப்பு அடிப்படை நிதி, பிற அரசுக் கட்டணங்கள் மூலம் வரி அல்லாத வருவாய் கிடைக்கிறது.
தமிழக அரசு 70 சதவீதம்-மத்திய அரசு 30 சதவீதம்: மத்திய அரசு அதன் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிதிப் பகிர்வு மற்றும் மத்திய அரசு அதன் திட்டங்களுக்கு வழங்கும் நிதியுதவி ஆகியவையும் மாநில வருவாய் வரவில் அடங்கும்.
எனவே, தமிழகம் பெறும் மொத்த வருவாய் வரவுகளில் சுமார் 30 சதவீதம் மத்திய அரசின் மூலமும், மீதமுள்ள 70 சதவீதம் தமிழக அரசின் வரி அல்லது வரி அல்லாத வருவாயிலிருந்து கிடைக்கிறது.
இந்த வருவாய் வரவுகளை வைத்துத்தான் சம்பளம், ஓய்வூதியம், திட்ட மானியங்கள், நிர்வாகம் போன்ற அனைத்து வருவாய் செலவுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நிதிநிலை பொறுப்புடமைச் சட்டத்தின்படி மாநில அரசுகள், வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படாமல் நிர்வாகத்தை நடத்த வேண்டும். மாநில அரசின் பெரும்பாலான செலவினங்கள் வருவாய்ச் செலவினங்கள்தான்.
சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் செலவினங்களில் வருவாய் செலவினங்களே அதிகம். எனவே, அதிக அளவில் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநில அரசுகளுக்கு வருவாய் உபரியைத் தொடர்ந்து பராமரிப்பது மிகக் கடினம். மேலும், பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டாலோ அல்லது வேறு காரணங்களால் வரி வருவாயில் போதிய வளர்ச்சி ஏற்படவில்லை என்றாலோ அதற்கேற்ப வருவாய்ச் செலவினங்களை திடீரென வருவாய் வரவுக்குள் கட்டுப்படுத்த முடியாது.
இதனால் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும். வருவாய் செலவினங்கள் ஆண்டுதோறும் 10 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துவரும் நிலையில் வருவாய் வரவுகள் இதற்கு இணையாக அல்லது கூடுதலாக உயர வேண்டும். இல்லையென்றால், வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.
காரணம் என்ன? பொருளாதார மந்த நிலை இந்திய அளவில் தொடர்ந்து நிலவுவதன் காரணமாகவும் பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விற்பனை விலை குறைந்தபோது உரியவாறு அதன் மீதான வரி இழப்பை ஈடுசெய்ய வரி விகிதத்தை உயர்த்தி ஈடுசெய்யாததாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் போதிய வளர்ச்சி வரி வருவாயில் இல்லை.
பொருளாதார மந்த நிலையின் காரணமாக முத்திரைத்தாள்கள் மற்றும் வாகனங்கள் மீதான வரியிலும் போதுமான வளர்ச்சியில்லை. பதினான்காவது நிதிக்குழுப் பரிந்துரைத்த நிதிப் பகிர்வில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று ஆணையம் கருத்துத் தெரிவித்து சராசரி நிதிப்பகிர்வில் 20 சதவீத அளவிற்கு குறைத்து விட்டது. இதனால் ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை மாநில அரசுக்கு நிதிப் பகிர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால்தான் மாநிலத்தின் வருவாய் வரவு குறைந்து விட்டது.
வருவாய்ப் பற்றாக்குறை குறையும்: பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் போது வரி வருவாய் அதிகரிக்கும் என்பதால் வருவாய்ப் பற்றாக்குறையும் படிப்படியாகக் குறைக்கப்படும். வருவாய்ப் பற்றாக்குறை நிலையைத் தவிர்க்கவே அரசு விரும்புகிறது.
வருவாய் வரவுகளை அதிகரிப்பதற்கு, வரி வசூலிக்கும் நிர்வாகத்தைப் பலப்படுத்தும் முயற்சிகளையும், வருவாய் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, நலத்திட்டங்கள் சரியான நபர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு துறைகளில் கணினி மயமாக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால், கணிக்கப்பட்ட அளவைவிட வருவாய்ப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது என்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com