24 மணி நேர பணிச்சுமையால் அவதிப்படும் பயிற்சி மருத்துவர்கள்

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு, மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறி 24 மணி நேர பணி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேர பணிச்சுமையால் அவதிப்படும் பயிற்சி மருத்துவர்கள்

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு, மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறி 24 மணி நேர பணி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 38 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 21, தனியார் மருத்துவக் கல்லூரிகள் 17 உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 4 ஆயிரத்து 810 மாணவர்கள் படிக்கின்றனர்.
இதில் சென்னை, செங்கல்பட்டு, சிதம்பரம், மதுரை, கோவை, சேலம், தஞ்சை, திருவாரூர், வேலூர், திருவண்ணாமலை, தேனி, சிவகங்கை, தர்மபுரி, விழுப்புரம், பெருந்துறை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டும் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 2 ஆயிரத்து 750 மாணவர்கள் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு படிப்பின்போதே மருத்துவமனைகளில் நோயாளிகளை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. நான்கரை ஆண்டு காலம் படிப்பு முடிந்ததும் இறுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த ஓராண்டு காலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிய வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த ஓராண்டில் மருத்துவமனையில் உள்ள அனைத்துத் துறைகளிலும் சுழற்சி முறையில் பயிற்சி மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர். பயிற்சி காலத்தின்போது மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உண்டு. மேலும் பயிற்சி மருத்துவர்கள் பணிச்செயல்பாடு தொடர்பாக துறைத்தலைவர்கள் அளிக்கும் மதிப்பெண்கள்தான் அவர்கள் மருத்துவர்களாக வருவதைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. பயிற்சிக் காலத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மீண்டும் பயிற்சி மருத்துவராக பணிபுரிய வேண்டும்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் வார்டுகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு 24 மணி நேரப்பணி ஒதுக்கப்படுகிறது. இதில் வார்டுகளுக்கு வரும் நோயாளிகளை சோதனை செய்வது, சேர்க்கை குறிப்புகள் அடங்கிய விவரங்கள் தயாரிப்பது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பயிற்சி மருத்துவர்களே செய்ய வேண்டியிருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் கூறும்போது, அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கு 12 மணி நேர பணி மட்டுமே வழங்க வேண்டும் என்பது இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பயிற்சி மருத்துவர்கள் 24 மணி நேரமும் கட்டாயம் பணிபுரிய வேண்டும். எலும்பு முறிவு உள்ளிட்ட சில வார்டுகளில் 48 மணி நேரம் பணிபுரிய வேண்டும். சரியான தூக்கம், உணவு இன்றி 24 மற்றும் 48 மணி நேரம் தொடர்ச்சியாக பணிபுரியும் போது, உடல், மனம் தளர்ச்சி அடைந்து விடுகிறது. இதனால் நோயாளிகளை சரியாக கவனிக்க முடியாது. பல நேரங்களில் நோயாளிகளுக்கு தவறானச் சிகிச்சை அளிக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது. வார்டுகளில் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவது, மருந்து, மாத்திரைகள் பரிந்துரைப்பது, பரிசோதனைக்காக ரத்தம் எடுப்பது, கவலைக்கிடமான நிலையில் வரும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிப்பது, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை
நோயாளிகளுக்கு அளிப்பது ஆகியவை மட்டும் பயிற்சி மருத்துவர்களின் வேலை. வார்டுகளில் நோயாளிகளின் சேர்க்கை விவரங்கள் அடங்கிய குறிப்புகள் தயாரிப்பது, மருந்துகள் இருப்பை சரிபார்ப்பது, பரிசோதனை முடிவுகளை வாங்கி வருவது ஆகியவை செவிலியர்களின் வேலை. ஆனால் செவிலியர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் நாங்களே செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். செவிலியர்களுக்கு சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேர பணி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் பயிற்சி மருத்துவர்கள் 24 மணி நேரம் பணிபுரிவதோடு அவர்களின் வேலையையும் சேர்த்து செய்யவேண்டி உள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகள் குறைந்த அளவு மட்டுமே வருவதால் அங்கு மாணவர்களுக்கு இந்த பிரச்னை கிடையாது. அரசு மருத்துவமனைகளில் எப்போதும் நோயாளிகள் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதால் பணிச்சுமையால் மிகுந்த சோர்வு ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஸ்டான்லி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டில் மட்டுமே இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி பயிற்சி மருத்துவர்களுக்கு 12 மணி நேர பணி வழங்கப்படுகிறது. இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது கிடையாது என்றனர்.
இதுதொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், போதுமான அளவு மருத்துவர்கள் இல்லை. இதனால் பயிற்சி மருத்துவர்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் மருந்து செலுத்துவோர்(இஞ்செக்சன் ஸ்டாப்) நியமிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி தவிர வேறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருந்து செலுத்துநர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பயிற்சி மருத்துவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். மருந்து செலுத்துநர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைப்பின்பு பயிற்சி மருத்துவர்கள் பணி நேரம் குறைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றனர்.


எஸ்.பி.உமாமகேஸ்வரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com