ஈரோடு சிறுவனுக்கு தடுப்பூசி போட்டதால் புற்றுநோய் ஏற்படவில்லை: தமிழக அரசு அறிக்கை

ஈரோடு சிறுவனுக்கு தடுப்பூசி போட்டதால் புற்றுநோய் ஏற்படவில்லை: தமிழக அரசு அறிக்கை

ஈரோடு சிறுவன் அன்பரசுக்கு தடுப்பூசி போட்டதால் புற்றுநோய் கட்டி ஏற்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.


சென்னை: ஈரோடு சிறுவன் அன்பரசுக்கு தடுப்பூசி போட்டதால் புற்றுநோய் கட்டி ஏற்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.

சிறுவன் அன்பரசு விவகாரத்தில் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்தது.

தமிழக அரசின் அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு செய்து ஏப்ரல் 5ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு இந்த அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி: ஈரோடு மாவட்டம், கொமராபாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(28). கூலி தொழிலாளியான இவருக்கு சுசீலா (24) என்ற மனைவியும், ஆறு வயதில் அன்பரசு என்ற மகனும் உள்ளனர். சிறுவனுக்கு ஆறு மாதம் இருக்கும் போது, அங்கன்வாடி மையத்தில் அம்மை தடுப்பூசியை வலது தொடையில் போட்டுள்ளனர். பின்னர் ஊசி போட்ட இடத்தில், சிறிய ரத்தக்கட்டு உருவானது.

நாளடைவில் சரியாகி விடும் எனக் கருதினர். இருப்பினும், இரண்டு வயது வரை சிறிதாக இருந்த ரத்தக்கட்டு, பின்னர் பெரிதாக வளர்ந்தது. தற்போது சிறுவனுக்கு ஆறு வயதாகும் நிலையில், மூன்று கிலோ எடையில் புற்று நோய்க் கட்டியாக மாறியிருக்கிறது.

இதுவரை, சிறுவனின் சிகிச்சைக்கு ரூ.3 லட்சத்துக்கும் மேல் செலவழித்தும் குணமடையவில்லை. இதனால் அவனது பெற்றோர் தவித்து வருவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வானது, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர், ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் நலவாரிய ஆணையர் உள்ளிட்டோரை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்துள்ளனர்.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,  மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சிறுவன் அன்பரசு வீட்டுக்குச் சென்று, அவனது பெற்றோரைப் பார்த்து பேசி சிகிச்சைக்காக சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்க ஏற்பாடு வேண்டும்.

இதற்கான உதவிகளை ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும். குழந்தையோடு பெற்றோரும் தங்குவதற்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும். அன்பரசுவின் சிகிச்சையை சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்வதோடு, தேவைப்பட்டால் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திலோ அல்லது வேறு ஏதேனும் மருத்துவமனையிலோ சேர்த்து சிகிச்சைக்கான மொத்த செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

ஒரு வேளை சிறுவனின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க மறுத்தால், அவர்களின் வாக்கு மூலத்தை மாவட்ட ஆட்சியர் பதிவு செய்து, மார்ச் 27-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து சுகாதாரத் துறைச் செயலாளர், ஈரோடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் ஆகியோர் மார்ச் 27 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com