வீட்டுமனை விவகாரம்: 'ரியல்' பிரச்னைக்கு ஆறுதல் தீர்வு?

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீட்டுமனை விவகாரம்: 'ரியல்' பிரச்னைக்கு ஆறுதல் தீர்வு?

சென்னை: அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய இடைக்காலத் தடை விதித்திருந்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை இன்று சற்று தளர்த்தியுள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

தடை உத்தரவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறுபதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தியுள்ளது.

தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வைத்த கோரிக்கை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படும் நிலத்தில், சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை, கழிவுநீர் குழாய் பதிக்க போதிய இடம் வசதி இல்லாத நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

2016ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முதல், 'சதுப்பு நிலங்களைப் பத்திரப் பதிவு செய்தது யார்' என்று உயர் நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது வரை ஒரு மீள்பார்வை.

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய இடைக்காலத் தடை விதிக்கக் காரணமாக இருந்த, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று உத்தரவிட்டது.

பிப்ரவரி 28
பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

அங்கீகாரமில்லா வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.


’பத்திரப் பதிவுக்கான தடை அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்' என்று மார்ச் 1ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

பத்திரப் பதிவுக்கான தடை என்பது அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

ஜனவரி 31
அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை நீடிக்கும்

அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடருகிறது.

நவம்பர் 23
சதுப்பு நிலங்களை பத்திரப் பதிவு செய்யக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

சதுப்பு நிலங்கள் தொடர்பான எந்தவித ஆவணத்தையும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது வேறு எந்தவித சொத்துகளுடனோ பத்திரப்பதிவு செய்யக் கூடாது என, மாநிலம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு சென்னை மண்டல பத்திரப்பதிவு ஐஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 10
விளை நிலங்களை அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை: திரும்பப் பெற உயர்நீதிமன்றம் மறுப்பு

அங்கீகாரமில்லாமல் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்றால், எந்த காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என்று பத்திரப் பதிவுத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆகஸ்ட் 24
ஆண்டு தோறும் குறையும் பத்திரப் பதிவுகள்: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தமிழகத்தில் சொத்து தொடர்பான ஆவணப் பதிவு உள்பட பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன.

கடந்த நிதியாண்டில் (2015-16) 25 லட்சத்து 28,561 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம், ரூ.8,562.38 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிக வரிகள்-பதிவுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப் பதிவில் வருவாய் இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை?

நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டதிலிருந்து பத்திரப் பதிவுத் துறைக்கான வருவாய் ஆண்டுதோறும் கணிசமாகக் குறைந்து வருகிறது.

இதனை சீரமைக்கும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநில அரசால் அமைக்கப்பட்ட குழு ஆராய்ந்து வருவதால், விரைவில் இப்பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவையும் கடந்து சதுப்பு நிலங்களை பத்திரப் பதிவு செய்தவர்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளது.

சதுப்பு நிலங்களை பதிவு செய்தவர்கள் யார்? அறிக்கை அளிக்க உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் சட்ட விரோதமாக 202 பத்திரப் பதிவுகளை பதிவு செய்த சார் பதிவாளர்கள் யார் என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மண்டல பத்திரப்பதிவு ஐஜி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com