கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் ரத்து: மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவு!

கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்ட உத்தரவை ரத்து செய்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் ரத்து: மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவு!

புதுதில்லி: கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்ட உத்தரவை ரத்து செய்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கீழடி கிராமத்தில், கடந்த 2015 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடந்த முதல்கட்ட அகழாய்வில் 1800 வகையான சங்க கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் சேகரிக்கப்பட்டன. சங்க கால கட்டட அமைப்பு உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் கட்ட அகழாய்வில் பல்வேறு அணிகலன்கள், சங்க கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் என 3,800 பொருள்கள் சேகரிக்கப்பட்டன.

இதற்கிடையே, கீழடி அகழாய்வை முடிக்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பெரும் முயற்சிக்குப் பிறகு மூன்றாம் கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் பணி தொடங்க இருந்தது.அந்த சமயத்தில் அகழாய்வில் இருந்த அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை அகழாய்வு அதிகாரிகள் இடமாற்றம் செய்யும் நடைமுறை இல்லாத நிலையில், அண்மையில் தான் இடமாற்றத்துக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, தொல்லியல் துறையின் நடவடிக்கை நிர்வாக நடைமுறை தான் என்று தெரிவிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வில் ஆர்வம் இல்லாமல் இருந்த மத்திய அரசு, தமிழகத்தின் நெருக்கடி காரணமாக மூன்றாம் கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்தது. இருப்பினும், முக்கியப் பொறுப்பில் இருந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது இப்பணியில் தொய்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியாது. அத்துடன்  தற்போது துணை கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரி தான் கீழடி ஆய்வுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது பணிமாற்ற உத்தவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அமர்நாத் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்ட உத்தரவை ரத்து செய்து, அவர் மீண்டும் கீழடியிலேயே பணியைத் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com