நகராட்சி ஆணையர் மாறுதல் விவகாரம்: ஆளுநர் கிரண்பேடி கடும் கண்டனம்

புதுச்சேரி நகராட்சி ஆணையர் மாறுதல் விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நகராட்சி ஆணையர் மாறுதல் விவகாரம்: ஆளுநர் கிரண்பேடி கடும் கண்டனம்

புதுச்சேரி நகராட்சி ஆணையர் மாறுதல் விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அறிவுறுத்தலின்படி முதலியார்பேட்டை சுதானா நகரில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக ஆணையர் சந்திரசேகரன் கடந்த சில நாள்களுக்கு முன்பு மகளிர் குழுக் கூட்டததை கூட்டினார். அப்போது அங்கு சென்ற பாஸ்கர் எம்.எல்.ஏ. தன்னை அழைக்காமல் கூட்டத்தை எப்படி கூட்டலாம் என ஆட்சேபித்தார். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதையடுத்து ஆணையர் சந்திரசேகரன் மீது பாஸ்கர் எம்.எல்.ஏ. பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம் உரிமை மீறல் பிரச்னை எழுப்பினார். அதற்கு பதிலடியாக ஆணையர் சந்திரசேகரன் டிஜிபியிடம் அளித்த புகாரில் பாஸ்கர் எம்.எல்.ஏ. தன்னைத் தாக்கி மிரட்டியதாக புகார் அளித்தார். இதனால் இப்பிரச்னை தீவிரமடைந்தது.

இதற்கிடையே சட்டப்பேரவை கூட்டத்தில் இப்பிரச்னை எழுப்பப்பட்டது. அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் ஆணையரின் செயல்பாடுகளை குறை கூறினர். இதையடுத்து அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும், நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்து விடுவிக்கவும், பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி வியாழக்கிழமை இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் பரிதா பிறப்பித்தார்.

ஆளுநர் கிரண்பேடி கடும் அதிருப்தி
இப்பிரச்னை தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரம்புமீறியது. பணி விதிகளை மீறி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நான் தில்லி சென்றுள்ளபோது காத்திருப்போர் பட்டியலில் அவரை வைத்துள்ளனர். மேலும் இரவு 11 மணிக்கு அவர் வீட்டின் சுவற்றில் இந்த உத்தரவை ஒட்டியுள்ளனர். 

இதுபோன்ற அவசரமான நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது. காவல்துறையில் அவர் அளித்துள்ள புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக நான் வந்தவுடன் விவாதித்து நடவடிக்கை எடுக்கலாம் என தலைமைச் செயலாளரிடம் கூறி இருந்தேன். சிறப்பாக செயல்படும் அதிகாரியை ஏன் தண்டிக்க வேண்டும்.

பின்னர் எவ்வாறு புதுவை மாநிலம் வளர்ச்சி பெறும். 

இந்த நடவடிக்கை பிற அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும். இனி அதிகாரிகள் சுயமாக செயல்பட மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் அரசின் ஆணைக்காக காத்திருப்பார்கள். இது பொது சேவையில் மிகப்பெரும் தடையை ஏற்படுத்தும். ஏற்கனவே அவர் மீதான உரிமை மீறல் விசாரணையில்தான் உள்ளது. 

அந்த அதிகாரி பதில் தரக்கூடிய வாய்ப்பு தரப்படவில்லை. தன் தரப்பு வாதத்தையும், விளக்கத்தையும் கொடுக்க வாய்ப்பு தரப்படவில்லை. இது ஒரு முக்கியமான பிரச்னை. இது பற்றி பத்திரிகை, ஊடகங்களுக்கு நன்றாக தெரியும். இந்த நடவடிக்கை நேர்மையானதாக தெரியவில்லை. ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். 

பணி விதிகள் மீறல்
அதிகாரிகள் தொடர்பான பணிவிதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. நிதி மற்றும் பணிவிதிகள் தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க என்னிடம் ஒப்புதல் பெறவில்லை.

யூனியன் பிரதேச நிர்வாகியான துணைநிலை ஆளுநருக்கு உள்ள பொறுப்புகளை மத்திய உள்துறை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் வலியுறுத்தி உள்ளது. இவை அனைத்து மீறப்பட்டுள்ளன. அரசு நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டிய தனது பொறுப்பை ஏற்கவில்லை.

தலைமைச் செயலர் மீது புகார்
தற்போதைய தலைமைச் செயலாளர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. பாரபட்சமுறையில் அவர் செயல்பட வேண்டும். விதிகள் தொடர்பாக அவர் அரசுக்கு விளக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அவர் செயல்படுகிறார்.

துணைநிலை ஆளுநர் என்பவர் வெறுமனே அமர்ந்து ஆட்சியாளர்கள் அனுப்பு கோப்புகளுக்கு ஒப்புதல் தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களு செயல்களுக்கு துணைபோக வேண்டும் என விரும்புகின்றனர். இதுதான் தற்போதைய நிலை. எடுத்துக்காட்டாக புதுச்சேரி கடற்கரை சீரமைப்புத் திட்டம் 2001-ல் தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவர்.

பேரவைத் தலைவருக்கு கடிதம்
நகராட்சி ஆணையரின் விளக்கத்தையும் கேட்க வேண்டும். விசாரமை முடிந்த பின் தான் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காத்திருப்போர் பட்டியலில் வைக்கக்கூடாது. அதிகாரிகளை இட மாற்றம் செய்வதற்கான அதிகாரம் துணநிலை ஆளுநரிடம் தான் உள்ளது. நான் தற்போது அதிகாரபூர்வ சுற்றுப் பயணத்தில் உள்ளேன்.

நான் சுறறுப்பயணத்தில் இருந்தாலும் பல கோப்புகள் எனது பார்வைக்கு வந்துள்ளன. அதே வகையில் இதுவந்திருக்க வேண்டும். ஆனால் செயல் விதிகளை மீறப்பட்டுள்ளன. பேரவைத் தலைவருக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளேன்.

மேலும் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடக்கம் முதலே அரசியல்வாதிகள், தலைமைச் செயலாளர் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு உரிய தகவல் தெரிவித்தும் வரவில்லை.

வார இறுதி நாள்களஇல் நான் செல்லும் தொகுதி எம்.எல்.ஏவுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வருவதில்லை. நான் எந்த ஆதாயமும் அடைய முயற்சிக்கவில்லை. நான் எனது கடமையை தான் செய்துள்ளேன் என்றார் கிரண்பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com