கோடை விடுமுறை: அரசு விரைவுப் பேருந்துகளில் 90 சதவீத முன் பதிவு நிறைவு

பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், அரசு விரைவுப் பேருந்துகளில் 90 சதவீதம் முன்பதிவு முடிந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பயணச் சீட்டு மையத்தில் அரசு விரைவுப் பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்யும் பயணிகள்.
சென்னை கோயம்பேடு பயணச் சீட்டு மையத்தில் அரசு விரைவுப் பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்யும் பயணிகள்.

பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம், சபரிமலை உள்பட பல்வேறு வழித்தடங்களில் 1,023 அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் 453 விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தந்தப் பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு விரைவுப் பேருந்துகள் வந்து செல்கின்றன.
தற்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர். இதன் காரணமாக விரைவுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
வார இறுதி நாள்களில்: இதில் ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி, மைசூரு, கன்னியாகுமரி, மூணாறு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் மற்றும் வெளியூர் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகளில் 90 சதவீதம் வரையில் முன்பதிவு முடிந்துள்ளன. வார இறுதி நாள்களில் விரைவுப் பேருந்துகளில் மட்டும் அதிகம் பேர் முன்பதிவு செய்கின்றனர். இதனால் முன்பதிவு செய்யாதோர் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலையிருப்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மாற்று ஏற்பாடு: இதுகுறித்து விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடை விடுமுறையில் பொதுமக்கள் தங்களது பயணத்துக்கு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்வது என்பது வாடிக்கைதான்.
அதிலும் வார இறுதி நாள்களில் மட்டும் கூட்டம் அதிகம் இருக்கும். பயணிகளின் கூட்டத்திற்கேற்ப, சென்னையில் இருந்து 70 பேருந்துகளும், மற்ற மாவட்டங்களில் இருந்து 100 பேருந்துகளும் வரழைக்கப்பட்டு கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்யப்படும். மற்ற நாள்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
வருவாய்: கோடை விடுமுறையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1.4 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் பயணக் கட்டணமாக ரூ.1.66 கோடி வசூலாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com