இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு: திருச்சிக்கு 6-ஆவது இடம்

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
துப்புரவுக்கான 'ஸ்வச் சர்வக்ஷன்-2017' விருதை, திருச்சி மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரனிடம் (இடது ஓரம்) வழங்குகிறார் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.
துப்புரவுக்கான 'ஸ்வச் சர்வக்ஷன்-2017' விருதை, திருச்சி மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரனிடம் (இடது ஓரம்) வழங்குகிறார் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவின் 434 நகரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த ஆண்டுக்கான மிகத் தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டது.
அந்தப் பட்டியலின் முதலிடத்தை மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, அதே மாநிலத்தைச் சேர்ந்த போபால் இரண்டாவது மிகத் தூய்மையான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து, மிக அசுத்தமான நகரம் என்ற பெயரை உத்தரப் பிரதேசத்தின் கோண்டா நகரம் பெற்றுள்ளது. அந்த நகருக்கு அடுத்தபடியாக மிக அசுத்தமான நகரம் என்ற பெயரை மகாராஷ்டிர மாநிலத்தின் புசாவல் நகரம் பெற்றுள்ளது.
அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 12 நகரங்கள், முதல் 50 இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி 50 இடங்களில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தின் 25 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மிகத் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சி 6-ஆவது இடத்தையும், கோயம்புத்தூர் 16-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
கர்நாடக மாநிலம், மைசூரு 5-ஆவது இடத்தையும், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. திருப்பதி 9-ஆவது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:
மதுரை-57, தாம்பரம்-62, திருப்பூர்-68, ஒசூர்-82, வேளாங்கண்ணி-84, திண்டுக்கல்-106, வேலூர்-108, காரைக்குடி-110, புதுக்கோட்டை-113, ராஜபாளையும்-125, காஞ்சிபுரம்-127, சேலம்-135, பல்லாவரம்-155, ஆவடி-169, நாகர்கோவில்-174, நாகப்பட்டினம்-185, திருநெல்வேலி-193, தஞ்சாவூர், கடலூர்-250, ஆம்பூர்-267, ராமேஸ்வரம்-268 ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com