கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: முன்னாள் அமைச்சரிடம் விசாரிக்கத் திட்டம்?

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக, முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக, முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஓம் பகதூர் மர்ம நபர்களால் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். மேலும், எஸ்டேட்டில் இருந்த சில பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக, சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து 11 பேரைத் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீஸாரால் தேடப்பட்ட கனகராஜ் ஏப்ரல் 28-இல் சாலை விபத்தில் உயிரிழந்தார். கனகராஜின் நண்பரும் வழக்கில் இரண்டாவது குற்றவாளியுமான சயன், ஏப்ரல் 29-இல் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அதேசமயம் சயனின் மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கொலைவழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவுப்படி அமைக்கப்பட்ட தனிப்படைகள், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, மனோஜ் ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதில், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி ஆகியோரின் செல்லிடப்பேசி எண்களைக் கொண்டு நடத்திய விசாரணையில், இருவரும் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. கொடநாடு எஸ்டேட்டில் இருவரும் தச்சு வேலை செய்தபோது முன்னாள் அமைச்சருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
கொடநாடு காவலாளியை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்ற போது கூடலூர் சோதனைச் சாவடியில் அவர்களின் காரை போலீஸார் மடக்கியுள்ளனர். அப்போது, அந்த முன்னாள் அமைச்சர் கூறியதன் பேரிலேயே கார் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே, தனிப்படையினர் அந்த முன்னாள் அமைச்சரிடமும் விரைவில் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே, மேலும் பல அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் ஒப்படைப்பு: இதனிடையே, கொடநாடு காவலாளி கொலை வழக்கில் இதுவரை 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கேரள மாநிலம், ஆழப்புழை, செர்தாலாவைச் சேர்ந்த சி.மனோஜ் என்கிற மனோஜ் சாமி என்பவரை கேரள காவல் துறையினர் ஏற்கெனவே கைது செய்திருந்தனர். அவரை தனிப்படை போலீஸாரிடம் வியாழக்கிழமை கேரள போலீஸார் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் மீது இரு கொலை வழக்குகள் உள்ளதாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் உள்ளதால் அவரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இருவரிடம் விசாரிக்க அனுமதி: கேரள சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஜம்ஷேர் அலி, ஜிதின் ஜாய் ஆகியோரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோத்தகிரி நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவரை வியாழக்கிழமை கொடநாடு எஸ்டேட் அழைத்துச் சென்று தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com