விவசாயிகள் தற்கொலை குறித்த வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

விவசாயிகள் நலன் காக்க எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்யுமாறு ...
விவசாயிகள் தற்கொலை குறித்த வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

புதுதில்லி: விவசாயிகள் நலன் காக்க எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு பொது நல வழக்காடு மையம் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்க்கர், மோகன் எம். சாந்தனகெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு உதவ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் சங்கர் நாராயணன் ஆஜராகி, 'எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய விழிப்புணர்வு, கொள்முதல் நிலையங்கள், மண்டிகள் தொடர்பான விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லை' என்றார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா ஆஜராகி, 'தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியால் மட்டும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மாறாக, விவசாய உற்பத்தி ஒன்றையே நோக்கமாகச் செயல்பட்டது இதற்குக் காரணம். இதை மாற்றியமைக்க விவசாய நலன் சார்ந்த வேளாண் முறையை அறிமுகப்படுத்தி வருகிறோம். இது குறித்து நிபுணர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விவசாயப் பிரச்னைகளுக்கு நிரந்தத் தீர்வு காண அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது' என்றார்.

இதைத் தொடர்ந்து, நாராயணன் வாதிடுகையில், 'வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், எளிதில் அணுகக் கூடிய இடங்களில் விளை பொருள்களுக்கான மண்டிகள், கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும்' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? விவசாயிகளுக்குத் தேவையான மண்டிகள், கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? இவை தொடர்பாக அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் போதுமான அளவுக்கு விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றனவா என்பது குறித்த அறிக்கையை மூன்று நாள்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்திலும், மாநில அரசால் எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகளை உறுதி செய்யும் நோக்கத்திலும் இந்தப் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டோம். இந்த நடவடிக்கையில் நேர்மறை சிந்தனையைக் கொள்லாமல், ஒரு பங்கேற்பாளராக சம்பந்தப்பட்ட மாநில அரசு பங்கு கொள்ள வேண்டும். அந்த வகையில் தற்போதைய வழக்கில் தமிழக அரசு நல்கி வரும் ஒத்துழைப்புக்கு பாராட்டுகள். இந்த வழக்கு விசாரணை வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது விவசாயிகளின் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளை தமிழக  அறிக்கையாக தாக்கல் செய்தது. அப்பொழுது விவசாயிகள் நலன் காக்க எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பான விபரங்களை தமிழக அரசின் வேளாண் மற்றும் சட்டத் துறை செயலர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை ஜுலை முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.              

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com