மே 14ம் தேதி சென்னை மாநகரின் முதல் மெட்ரோ ரயில் சுரங்க வழி சேவை துவக்கம்

சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான 7.6 கி.மீ. தூரத்துக்கான சென்னை மாநகரின் முதல் மெட்ரோ ரயில் சுரங்க வழி சேவை மே 14 ஆம் தேதி தொடங்குகிறது.
மே 14ம் தேதி சென்னை மாநகரின் முதல் மெட்ரோ ரயில் சுரங்க வழி சேவை துவக்கம்


சென்னை: சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான 7.6 கி.மீ. தூரத்துக்கான சென்னை மாநகரின் முதல் மெட்ரோ ரயில் சுரங்க வழி சேவை மே 14 ஆம் தேதி தொடங்குகிறது.

கொல்கத்தா, தில்லி, பெங்களூருவுக்கு அடுத்த படியாக, நாட்டின் நான்காவது சுரங்க வழி சேவை சென்னையில் துவங்க உள்ளது.

புதிதாகத் தொடங்கப்பட உள்ள மெட்ரோ ரயில் சேவையை தமிழக தொழில்துறை அமைச்ச்ர எம்.சி. சம்பத் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதன் துவக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் வெங்கைய நாயுடு பங்கேற்பார் என்றும் தெரிய வந்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2012-ஆம் ஆண்டு நேரு பூங்காவில் தொடங்கியது. இந்தப் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடந்து வந்தது.

திருமங்கலம் தொடங்கி நேரு பூங்கா வரையிலும் சுரங்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு மேற்காண்டது.

இந்த இரண்டு நாள் ஆய்வில் திருப்தி ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு ஆணையர் பொது மக்கள் போக்குவரத்துக்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சென்னையின் முதல் சுரங்க வழி மெட்ரோ ரயில் சேவையான திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான பயணிகள் சேவை மே 14 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

நெரிசலைக் குறைக்க....: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு ரூ 20 ஆயிரம் கோடி செலவில் இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறக்கும் பாதை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், சின்னமலை முதல் - விமான நிலையம் வரையிலும், ஆலந்தூர் - பரங்கிமலை வரையிலும் மெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்த வழிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் சவாலாக இருந்தது நேரு பூங்கா - எழும்பூர் இடையிலான சுரங்கப் பாதை மட்டுமே. இந்தப் பகுதியில் அதிகமான பாறைகள் இருந்ததால் டனல் போரிங் இயந்திரங்களுக்கு கடும் சேதங்கள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட 2012-ஆம் ஆண்டில் சுரங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016-ஆம் ஆண்டுதான் முடிவுற்றன.

இந்தியாவிலேயே அதிகம்: இந்தியாவின் பல்வேறு மாநகரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் உயர்நிலை பாலத்தில்தான் இயக்கப்பட்டு வருகின்றன. பெங்களூரின் சில இடங்களில் சுரங்க ரயில் பாதை சேவை உள்ளது. இதேபோல, சென்னையில் மட்டும் சுமார் 25 கி.மீ. தூரம் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பிரான்ஸ், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டன.

சாலைக்குக் கீழே சுமார் 20 மீட்டர் ஆழத்தில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. சாலை மட்டத்திலிருந்து 17 மீட்டருக்கு கீழே சுரங்கம் தோண்டப்படுகிறது. 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக இந்தச் சுரங்க ரயில் பாதை அமைகிறது.

மேலும், 6.2 மீட்டர் விட்டத்தில் சுரங்கப் பாதை அமைவதால், அந்தப் பாதையிலிருந்து, தரைப் பகுதி 10 அடி உயரத்துக்கு மேல்தான் இருக்கும். இதனால், குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்களுக்கு பாதிப்பு இருக்காது. ஒரு நாளைக்கு 5 முதல் 6 மீட்டர் தொலைவு வரை சுரங்கம் தோண்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com