பிளஸ் 2: ரேங்க் முறை ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
பிளஸ் 2: ரேங்க் முறை ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
முதல் 3 இடங்கள் கிடையாது: அதன்படி, மாநில-மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் பற்றிய ரேங்க் விவரங்கள் வெளியிடப்படாது எனவும், இந்த புதிய நடைமுறை வெள்ளிக்கிழமையன்று (மே 12) வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளிலேயே பின்பற்றப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய அறிவிப்புக்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வியாழக்கிழமை பிறப்பித்தார். இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிக் கல்வித் துறையின் உயர்நிலைக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல லட்சம் மாணவர்கள் எழுதும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஒரு சில மாணவர்களை மட்டும் மாபெரும் வெற்றியாளர்களாகக் கருதி மாநில மற்றும் மாவட்ட தரப்பட்டியல் அறிவிக்கும் நிலை உள்ளது.
இதனை நடப்பாண்டு முதல் கைவிடலாம் என்று உயர்நிலைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்குப் பதிலாக பரந்துபட்ட நிலையில் மாணவர்களை அங்கீகரிக்கும் தனியொரு திட்டத்தை வடிவமைக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளது.
இப்போது முதலே நடைமுறை: இந்த கருத்துகளை தமிழக அரசு கவனமாக ஆலோசித்தது. மத்திய இடைநிலைக் கல்வி வாரிய நடைமுறையின் அடிப்படையிலும், பெற்றோர் மற்றும் பொது மக்களிடமிருந்து அவ்வப்போது அரசுக்கு கொண்டு வரப்பட்ட புகார்களின் படியும், மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழல்களைத் தவிர்க்கவும் இந்தக் கல்வியாண்டு (2016-17) முதல் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் முறையைக் கைவிடலாம் என்று அரசு கருதுகிறது.
இந்த நடைமுறையை உடனடியாகப் பின்பற்றுமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாற்று ஏற்பாடு: இப்போதைய முறைக்கு மாற்றாக பரந்துபட்ட நிலையில் கல்விச் செயல்பாடுகள் உள்ளிட்ட பிற தனித்திறன்கள் உடைய சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும் அரசுக்கு உரிய கருத்துகளை அனுப்புமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் புதிய முடிவுக்குக் காரணம் என்ன?

பள்ளிகளுக்கு இடையே போட்டி, மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்டவையே பிளஸ் 2 தேர்வு முடிவில் ரேங்க் முறை ரத்து என்ற புதிய முடிவுக்குக் காரணம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட அரசு உத்தரவு விவரம்: பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல், இரண்டு மற்றும் மூன்று இடங்கள் என்ற வகையில் அறிவிக்கும் முறை இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. மாணவர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்பதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
கடும் போட்டியில் ஈடுபடும் பள்ளிகள்: இந்தப் போட்டியானது, இன்றைய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியாக மாற்றம் அடைந்துள்ளது. ஒவ்வொரு பள்ளியும் மாவட்ட அளவில் மாநில அளவில் பெறும் மதிப்பெண்களை முக்கிய இலக்காகக் கருதி அதற்கான கடும் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன.
தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படும் மாணவர்கள்: இதன் விளைவாக மாணவர்கள் கடும் மன அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாகின்றனர். முதல் வகையான மாணவர்களே போற்றி கவனிக்கப்படும் நிலையில் கடை மற்றும் இடை நிலை மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகும் நிலை தென்படுகிறது. போட்டிமயமான கற்றல் சூழ்நிலையில் தாக்குப்பிடிக்க முடியாத பல குழந்தைகள் மன இறுக்கத்துக்கும், கடும் சோர்வுகளுக்கும் உள்ளாவதை அவ்வப்போது பெறப்படும் புகார்களின் மூலம் அறிய முடிகிறது.
அழகிய செயல்பாடு: கற்றல் என்பது தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்தல், வினவுதல், திறனடைதல், புதியன படைத்தல் என்ற பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஓர் அழகிய செயல்பாடாகும். இதில் எழுத்துப்பூர்வமான தேர்வின் மதிப்பெண்களே அதீத முக்கியத்துவம் பெற்று ஒரு சில மாணவர்களே போற்றப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டியதாக உள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com