அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் சுப்ரமணியம் தற்கொலையை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரி நியமனம்

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் தற்கொலையை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரி சத்தியமூர்த்தி நியமனம்

நாமக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் தற்கொலையை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரி சத்தியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல்-மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் (58). சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர்.
விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது, சுப்ரமணியம் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் இருமுறை சுப்ரமணியம் விசாரணைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், 3ஆவது முறையாக சுப்ரமணியம் விசாரணைக்குச் செல்ல வேண்டிய நிலையில், கடந்த 8ஆம் தேதி மோகனூரில் உள்ள அவரது தோட்ட வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் நியமனம் செய்யப்பட்டார். அவர் வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கியபோது, சுப்ரமணியம் இறப்பதற்கு முன்னர் அவர் எழுதியதாகக் கூறப்படும் 4 பக்கக் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதில், சுப்ரமணியத்தின் முழு விவரம், இறப்புக்கான காரணம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் இரு கடிதங்களை எழுதியிருப்பதாகவும், அது யாருக்கு அனுப்பப்பட்டது என்றோ, என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரம் எதுவும் இல்லை.

இதனிடையே, அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து சுப்ரமணியத்துடையதுதான் என அவரது மகள் அபிராமி கூறியதாக, போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, வழக்கு ஆவணங்கள் வழங்கப்பட்ட பின்னர் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை விரைவில் தொடங்க உள்ளனர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி சத்யமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com