தேடித் தேடி பணத்தைச் சேர்ப்பதைவிட தேடித் தேடி நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்: தமிழருவி மணியன்

தேடித் தேடி பணத்தைச் சேர்ப்பதைவிட தேடித் தேடி நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர்
தேடித் தேடி பணத்தைச் சேர்ப்பதைவிட தேடித் தேடி நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்: தமிழருவி மணியன்

திருவொற்றியூர்: தேடித் தேடி பணத்தைச் சேர்ப்பதைவிட தேடித் தேடி நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்படும் சிந்தனைச்சாரல் மாதாந்திர நிகழ்ச்சி திருவொற்றியூர் சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 'வாழ்க்கையெனும் ஜீவரசம்' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியதாவது:

வாழ்க்கை என்பது பொதுவாகத் துன்பம் அதிகம் நிரம்பியதுதான். ஆனால் இன்பம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொள்ள நாம்தான் முயற்சிக்க வேண்டுமே தவிர துன்பத்தை எண்ணியே வருத்தமடைய முடியாது. பசி, நோய், பகை இல்லாத வாழக்கையில் அறம் சிறக்கும்.

பண்பாடு நிறைந்த வாழ்க்கையை தாய்மொழி மூலமே நாம் பெற முடியும். திருக்குறள், திருமந்திரம்,  புறநானூறு, தேவாரம், திருவாசகம், புராணங்கள்ம, இதிகாசங்கள் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறம் சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகளை தொன்மையான தமிழ்மொழி வகுத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழர்களைப் பொறுத்தவரை அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும். இளம்வயதிலிருந்தே இவ்வாறு கற்பதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

தீமையின் நிழல்படாத அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும். தீயவழியில் பொருளீட்டுவதையே ஒருவன் வழக்கமாகக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அப்பழக்கம் குணப்படுத்த முடியாத வியாதியைப் போல ஒட்டிக் கொள்ளும். பிறகு துன்பத்திலிருந்து அவன் விடுபடவே முடியாது என்பதை உணர வேண்டும்.

எதனையும், யாரையும் அற்பமாகக் கருதக்கூடாது. வாழ்வு என்பது பெற்றுக் கொண்டே இருப்பது அல்ல. ஏழைகளுக்குக் கொடுப்பதன் மூலமே உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

படித்தவர்கள் எல்லாம் ஞானம் நிறைந்தவர்கள் என்று கருதிவிட முடியாது. தகவல்களைப் பெற்று சிந்தனை நிறைந்த அறிவாற்றலை தொடர்ந்து வளப்படுத்தி வந்தால் பிறகு ஞானத்தை அடைய முடியும். ராமகிருஷ்ண பரமஹம்சர் படிக்காதவர். அவரை மெத்தப் படித்த விவேகானந்தர் குருவாக ஏற்றுக்கொண்டதற்கு காரணம் ராமகிருஷ்ணரின் ஞானம்தான்.

தேடித் தேடி பணத்தைச் சேர்ப்பதைவிட தேடித் தேடி நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். உணவு, உறக்கம், உழைப்பு, இன்பம், சிந்தனை ஆகியவற்றில் மலைக்கும் மடுவிற்கும் நடுவே நாம் செல்ல வேண்டும். எந்த விலங்கும், பறவையும் காலச் சூழலுக்கு ஏற்ப தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுவிடவில்லை. காரணம் அவற்றுக்கு மனிதனைப்போல சிந்தனை அறிவு கிடையாது.

எனவே, இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டுக் கொண்டு, அறநூல்களில் கூறப்பட்டுள்ளவைகளைக் கடைப்பிடித்து ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதுவே ஜீவரசமாக சுவையோடு இருக்கும் என்றார் மணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com