பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம்

அமைச்சருடனான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து திட்டமிட்டபடி திங்கள்கிழமை (மே 15) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும்
போக்குவரத்துத் தொழிலாளர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை பல்லவன் சாலையில் முன்னறிவிப்பின்றி சாலையில் நிறுத்தப்பட்ட மாநகர பேருந்துகளை அப்புறப்படுத்த ஓட்டுநர், நடத்துநர்
போக்குவரத்துத் தொழிலாளர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை பல்லவன் சாலையில் முன்னறிவிப்பின்றி சாலையில் நிறுத்தப்பட்ட மாநகர பேருந்துகளை அப்புறப்படுத்த ஓட்டுநர், நடத்துநர்

அமைச்சருடனான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து திட்டமிட்டபடி திங்கள்கிழமை (மே 15) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படும். 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதியோடு முடிவடைந்தது.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவேண்டிய 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7-இல் நடைபெற்றது.
புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் மே 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.
இதைத் தொடர்ந்து 2-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை.
3-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த 8-ஆம் தேதியும், 4-ஆம் கட்டப் பேச்சுவார்தை வியாழக்கிழமையும் (மே 11) சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இவற்றில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைக்கவும், பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கும் வகையிலும் சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தனித் துணை ஆணையர் யாஷ்மின் பேகம் தலைமையில் 5-ம் கட்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை சனிக்கிழமையும் தொடர்ந்தது. ஆனால், அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து சென்னை பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள மாநகரப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி உள்பட பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவித்தபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டாக அறிவித்தனர்.
இதுகுறித்து தொமுச மாநில பொதுச் செயலாளர் சண்முகம், சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:
பேச்சுவார்த்தையில், ஏற்கெனவே அறிவித்த ரூ.750 கோடி அடுத்த இரண்டு நாள்களில் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதாகவும், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.500 கோடி வழங்க முதல்வர் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். மீதித் தொகை எந்தெந்த நாள்களில் வழங்கப்படும் என்பதை அரசாணையாக வெளியிட வேண்டும்.
தற்போது, ரூ.1250 கோடி தருவதாக வாய்மொழியாக அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது. எனவே, திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதில் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்கூட்டியே தொடங்கியது வேலைநிறுத்தம்: பயணிகள் அவதி

அரசுடனான தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தொடங்கினர். இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
திமுகவின் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட முக்கிய சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 8 மண்டலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்து வேலைநிறுத்தம் தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வெளியூர் செல்லவதற்கு காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியினர்.
சென்னையில்...: சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள பணிமனையில் தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தினர். பிற்பகல் 4 மணிக்கு மேல் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன.
பயணிகள் அவதி: திடீரென பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பேருந்துகள் இயக்கப்படாததால் வாடகைக் கார்கள், ஷேர் ஆட்டோ, ஆட்டோக்கள் ஆகியவற்றின் மூலம் வீடு திரும்பத் தொடங்கினர்.
போலீஸ் பாதுகாப்பு: வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பேருந்து நிலையங்கள், பணிமனைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com