வேலைநிறுத்தம்: பேருந்து சேவை பாதிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் பேருந்து சேவை திங்கள்கிழமை (மே 15) பெரும் பாதிப்புக்குள்ளானது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் பேருந்து சேவை திங்கள்கிழமை (மே 15) பெரும் பாதிப்புக்குள்ளானது.

பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். சென்னையில் மின்சார ரயில்களிலும், வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்களில் பெரும்பாலானோர் பயணம் செய்தனர்.
அமைச்சர் வேண்டுகோள்: 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் உள்பட போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதால், வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோயம்பேட்டில்... சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. சென்னையில் 2,600 அரசுப் பேருந்துகளில், 400 மட்டுமே இயங்கின.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் தனியார் பஸ்களின் பேருந்து நிலையமாக திங்கள்கிழமை காட்சி அளித்தது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் 542 மாநகரப் பேருந்துகளில், 121 பேருந்துகள் மட்டுமே திங்கள்கிழமை இயக்கப்பட்டன.
திருச்சி, மதுரையில்... திருச்சியில் 95 சதவீதம், மதுரை, திருவாரூரில் 90 சதவீத அளவுக்கு பேருந்துகள் ஓடவில்லை; தேனி மாவட்டத்திலும் பேருந்து சேவை பெருமளவில் பாதிப்புக்குள்ளானது. திருச்சி மாவட்டத்தில் பெருமளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதால், மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்றனர்.
நாமக்கல்லில் பாதிப்பில்லை: நாமக்கல்லில் 90 சதவீத அளவுக்கு அரசுப் பேருந்துகள் ஓடின. சேலம் மாவட்டத்தில் 86, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா சுமார் 70, விருதுநகரில் 50, திருவண்ணாமலையில் 45, ராமநாதபுரத்தில் 15 சதவீதப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
55 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற சில சம்பவங்களில், 55 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சென்னை தண்டையார்பேட்டை, குரோம்பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 12 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன;
சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 43 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற தாற்காலிக ஓட்டுநரை சிலர் வழிமறித்துத் தாக்கினர்.
இன்று பேச்சு: போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர திங்கள்கிழமை முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அதிகாரிகள் பலர் பணிகளில் ஈடுபட வேண்டியிருந்ததால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை (மே 16) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்.

 

"எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தால் வாபஸ்'

எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.
இதுதொடர்பாக தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம், சிஐடியு தலைவர் அ.சவுந்தரராஜன் ஆகியோர் திங்கள்கிழமை கூறியது:
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்பட்டுவரும் நஷ்டத்தை ஈடுகட்ட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து, நம்பத்தகுந்த வகையில் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்படும்.
ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவைத் தொகையான ரூ.1700 கோடி. இதேபோன்று பணியில் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் பி.எஃப்., சொசைட்டி கடன் தொகை, எல்.ஐ.சி. என பல வழிகளில் பிடித்தம் செய்த தொகையை பல ஆண்டுகளாக தொடர்புடைய நிறுவனங்களுக்குச் செலுத்தாமல் அரசு தனது செலவினங்களுக்குப் பயன்படுத்தி கொண்ட வகையிலான சுமார் ரூ.4,500 கோடி என மொத்தம் ரூ.7000 கோடியை தமிழக அரசு அளிக்க வேண்டும்.
ஆனால், இதுகுறித்து குறைந்தபட்ச உத்தரவாதத்தைகூட அளிக்க அரசு மறுப்பது ஏன்? இது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் உழைக்கும், உழைத்த தொழிலாளிகளின் பணம். அதை அரசு எடுத்துக் கொண்டு திரும்ப அளிக்கத் தயங்குவது ஏன் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.

கோரிக்கைகள் செப்டம்பருக்குள் நிறைவேற்றப்படும்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக வரும் செப்டம்பருக்குள் நிறைவேற்றப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
முதல்வர் உறுதி: போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் போக்குவரத்துத் தொழிளாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது:-

சென்னைக்கு 1000 பேருந்துகள்: மக்களுக்கு உதவும் வகையில் செவ்வாய்க்கிழமை (மே 16) முதல் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும். வெளியூர்களிலிருந்து சென்னைக்கு 1,000 பேருந்துகள் கொண்டு வந்து இயக்கப்படும். தெற்கு ரயில்வேயிடம் உதவி கோரியுள்ளோம். சென்னையில் கூடுதல் மின்சார ரயில்களை இயக்குவதாக அவர்களும் உறுதி அளித்துள்ளனர்.
தேவை ஏற்பட்டால் ஓட்டுநர், நடத்துநர் உரிமம் பெற்றிருப்பவர்களைப் புதிதாகப் பணியில் அமர்த்தி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் வைத்திருந்தாலும், சிறந்த ஓட்டுநரைத் தேர்வு செய்தே பேருந்துகளை இயக்க அனுமதிப்போம். அதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ரூ.1,250 கோடி ஒதுக்க ஒப்புக்கொண்டும்கூட...: தொழிலாளர்களின் நிலுவைத் தொகையில் முதலில் ரூ.500 கோடியும், பிறகு ரூ.750 கோடியும், அதற்குப்பின் ரூ.1250 கோடியும் தருவதாக உறுதி அளித்தும் போராட்டத்தை வாபஸ் பெற மறுக்கின்றனர்.
பணிக்குத் திரும்ப வேண்டும்: அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காகவே தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தைக் கைவிட்டு, அனைவரும் செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com