திருத்தணியில் 45.5 டிகிரி வெப்பம்: கடந்த 15 ஆண்டுகளில் அதிக வெப்பமான நாளாகப் பதிவு

தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று 114 டிகிரி வெயில் பதிவானது.
திருத்தணியில் கடுமையான வெயிலிலும் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு டிராக்டரை ஓட்டிச்செல்லும் தொழிலாளி.
திருத்தணியில் கடுமையான வெயிலிலும் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு டிராக்டரை ஓட்டிச்செல்லும் தொழிலாளி.

திருத்தணி: தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று 114 டிகிரி வெயில் பதிவானது.

மாநிலம் முழுவதும் 13 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது.

2003ம் ஆண்டு மே 29ம் தேதி 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதுவே இந்த நாள் வரை அதிகபட்ச வெப்பம் பதிவான நாளாகும். அதன்பிறகு நேற்று 45.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால், 2003ம் ஆண்டுக்குப் பிறகு 2017 மே 16ம் தேதிதான் அதிக வெப்பமான நாளாக உள்ளது.

திருத்தணிக்கு கடற்கரை காற்று இல்லாததால், கோடை வெயில் காலத்தில் இப்படி 44 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெப்ப சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருத்தணியில் 114 டிகிரி: இந்த கோடையில் திருத்தணியில் தொடர்ந்து வெயிலின் அளவு அதிகமாக இருந்து வருகிறது. திங்கள்கிழமை 112 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மிக அதிகபட்சமாக 114 டிகிரி வெப்பம் பதிவானது.

கோடைகாலத்தின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் கடந்த சில நாள்களாக பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை நகரில் திங்கள்கிழமை 109 டிகிரி வெயில் பதிவானது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றனர்.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
திருத்தணி - 114
வேலூர் - 109
திருச்சி - 108
சென்னை, கரூர் பரமத்தி - 107
பாளையங்கோட்டை - 106
திருப்பத்தூர் - 105
மதுரை, சேலம் - 104
கடலூர், தருமபுரி - 103
நாகப்பட்டினம் - 101
புதுவையில்: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை 105 டிகிரியும் காரைக்காலில் 102 டிகிரியும் வெயில் பதிவானது.

தமிழகத்தில் பருவநிலை மாறி மாறி வருகிறது. மார்கழி, தை மாதங்கள் முன்பனி காலமாகவும், மாசி, பங்குனி பின்பனி காலமாகவும், சித்திரை, வைகாசி வசந்த காலமாகவும் கருதப்படுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மாசி மாதத்திலேயே வெயில் கொளுத்த தொடங்கி விடுகிறது. பங்குனி, சித்திரை மாதங்களில் அனல் காற்று வீசுகிறது. வெளியில் நடமாடவே மக்கள் அஞ்சும் அளவுக்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.

திருத்தணியை பொருத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை பெய்யவில்லை. ஆண்டுதோறும் தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் தான் அதிக அளவில் வெயில் பதிவாகும். நடப்பாண்டில் கரூர் பரமத்தி, திருத்தணி ஆகிய இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. திருத்தணியில் வரலாறு காணாத வகையில் செவ்வாய்க்கிழமை 114 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

கடுமையான வெயிலால் வியர்த்து, தண்ணீர் ஊற்றியது போல் உடல் முழுவதும் நனைந்து விடுகிறது. மேலும், நாக்கு வறண்டு விடுவதால் தர்ப்பூசணி, இளநீர், கரும்பு ஜூஸ், மோர், குளிர்பானங்களை மக்கள் அதிக அளவில் வாங்கி அருந்துகின்றனர்.

திருத்தணி மையப்பகுதியில் மரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எங்கு பார்த்தாலும், கட்டடங்களாகவே காட்சியளிக்கின்றன. பெயரளவில் கூட நிழல் கிடைக்காததாலும், மரங்கள் தரும் வரப்பிரசாதமாகிய குளிர்ந்த காற்று கிடைக்காததாலும் மக்கள் வாடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com