அடுத்தகட்டப் போராட்டம் குறித்து 21-இல் முடிவு: அய்யாக்கண்ணு

அடுத்தகட்டப் போராட்டம் குறித்து மே 21-ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்டப் போராட்டம் குறித்து மே 21-ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கோடி ஏக்கருக்கு மேல் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசிடம் வறட்சி நிவாரணமாக ரூ. 21,240 கோடி தமிழக அரசால் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு வறட்சி நிவாரணத் தொகையை ஒதுக்கீடு செய்யவில்லை.
மேலும், விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக உரம் வாங்குவதற்கு ரூ. 2,600 கோடி கேட்கப்பட்டது. ஆனால், 1,748 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லை.
தமிழகத்தில் வறட்சியால் 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, விவசாயிகள் வறட்சியால் சாகவில்லை. வயது மூப்பு காரணமாகவே இறந்துவிட்டனர் என்று தெரிவித்தது.
சென்னையில் மே 18-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளோம். அப்போது, 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேசவுள்ளோம். அதன் பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த 12 சங்கங்கள், 28 மாநிலங்களில் உள்ள விவசாய சங்கங்கள் கலந்துகொள்ள உள்ள ஆலோசனைக் கூட்டத்தை தில்லியில் மே 21-ஆம் தேதி நடத்தவுள்ளோம்.
அந்தக் கூட்டத்தில் நதிகள் இணைப்பு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை வழங்குதல், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும், அடுத்தகட்டப் போராட்டம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com