5 சதவிகித பயிர்க்கடன் வட்டி மானியம் ரத்து: விவசாயத்தை அடியோடு அழித்துவிடும்! அன்புமணி ராமதாஸ்

5 சதவிகித பயிர்க்கடன் வட்டி மானியம் ரத்தானது விவசாயத்தை அடியோடு அழித்துவிடும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 சதவிகித பயிர்க்கடன் வட்டி மானியம் ரத்து: விவசாயத்தை அடியோடு அழித்துவிடும்! அன்புமணி ராமதாஸ்

5 சதவிகித பயிர்க்கடன் வட்டி மானியம் ரத்தானது விவசாயத்தை அடியோடு அழித்துவிடும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயத்தை முற்றிலும் ஒழித்து விட வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்து விட்டதோ என்னவோ, வேளாண் தொழிலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக வேளாண் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5% வட்டி மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

வேளாண் தேவைகளுக்காக ஆண்டுக்கு 9% வட்டியில் குறுகியக் கால பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பெறப்படும் பயிர்க்கடன்களுக்கு மத்திய அரசு  5% வட்டி மானியம் வழங்குவதால் உழவர்களுக்கு 4% வட்டியில் கடன் கிடைத்து வந்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்படும் பயிர்க்கடனுக்கு தமிழக அரசு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூடுதலாக 4% வட்டி மானியம் வழங்குவதால் தவணை தவறாமல் கடனை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டி  இல்லாமல் கடன் கிடைத்து வந்தது. கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கிடைத்த பயிர்க்கடன் வேளாண்மையைத் தொடருவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது.

ஆனால், முன்னறிவிப்பின்றி 5% வட்டி மானியத்தை மத்தியஅரசு கடந்த மாதம் முதல் நிறுத்தி விட்டது. இதனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் பெறுபவர்கள் ஆண்டுக்கு 9% வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே உரம் மற்றும் பூச்சிக் கொல்லி விலை உயர்வு, விதைகள் விலை உயர்வு, பாசனத்திற்கான செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உழவர்களுக்கு, வட்டி மானியம் ரத்து கூடுதல் சுமையை ஏற்படுத்தும். விவசாயிகள் பயிர்களில் முதலீடு செய்யும் தொகை திரும்பக் கிடைப்பதில்லை என்ற வருத்தம் நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில்,  கூடுதலாக 5% வட்டி செலுத்த வேண்டும் என்றால் எவரும் விவசாயம் செய்வதற்கு முன்வர மாட்டார்கள்.

தமிழக விவசாயிகள் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வறட்சியால் பயிர்கள் கருகியதையும், அதனால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் கடன் சுமையையும் தாங்கிக் கொள்ள முடியாமல் 400-க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். உழவர்களின் தற்கொலைகளை தடுக்க பொதுத்துறை வங்கிகளில் அவர்கள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.  இதுகுறித்து பிரதமர் மோடிக்கு நான் பலமுறை கடிதம் எழுதியதுடன் நேரிலும் வலியுறுத்தியுள்ளேன். 

ஆனாலும் உழவர்களின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யாத மத்திய அரசு, பயிர்க்கடன் மீதான வட்டியை 4 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாக அதிகரித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்ததைப் போன்று உழவர்களுக்கு மத்திய அரசு மீண்டும் மீண்டும் துரோகம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. கடந்த 2015-ஆம் ஆண்டில்  இதேபோன்று பயிர்க்கடன் மீதான 5% வட்டி மானியத்தை ரத்து செய்ததுடன், வட்டி விகிதத்தையும் 11% ஆக அதிகரித்தது. அதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த முடிவை மத்திய அரசு திரும்பப்பெற்றுக் கொண்டது.

மக்களவைத் தேர்தலின் போது விவசாயிகளின் வாக்குகளை வாங்குவதற்காக எண்ணற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாரதிய ஜனதா, தேர்தலில் வெற்றி பெற்றதும் அவற்றைக் குழிதோண்டி புதைத்து விட்டது. உழவுத் தொழிலில் கிடைக்கும் லாபத்தை அதிகரிக்கும் நோக்குடன் விளைபொருட்களின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று பாரதிய ஜனதா உறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நெல், கரும்பு ஆகியவற்றின் கொள்முதல் விலைகள் 3- முதல் 4 விழுக்காடு  வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் இடுபொருட்களின் விலைகள் முறைந்த பட்சம் 20 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன.

உழவர்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு ஆவர். முதுகெலும்பை முறித்து விட்டால் அதன் பின்னர் பொருளாதாரம் தலை நிமிரவே முடியாது. இதை உணர்ந்தும், உழவர்களின் சுமைகளை குறைக்கும் வகையிலும் பயிர்க்கடன் மீதான 5% வட்டி மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com