நான்கு பாடங்களில் செண்டம்; ஆனால் ஒரு பி.காம் சீட்டுக்கு திண்டாட்டம்! 

சமீபத்தில் வெளியான ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் நான்கு பாடங்களில் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண்கள் எடுத்தும்
நான்கு பாடங்களில் செண்டம்; ஆனால் ஒரு பி.காம் சீட்டுக்கு திண்டாட்டம்! 

கோயம்புத்தூர்: சமீபத்தில் வெளியான ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் நான்கு பாடங்களில் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண்கள் எடுத்தும், கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் பி.காம் சீட்டு ஒன்றினை பெறுவதற்கு வழியில்லாமல் திண்டாடி வரும் வினோதம் நிகழ்ந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் மற்றும் வணிகக் கணிதம் ஆகிய நான்கு பாடங்களிலும் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். முன்னேறிய வகுப்பினைச் சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை ஒரு பெயிண்ட்டராக வேலை செய்து வருகிறார்.

தேர்வு முடிவுகள் வந்த உடனே, கடந்த வெள்ளியன்று (12-ஆம் தேதி) நகரில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி ஒன்றை அணுகிய அந்த மாணவி,  பி.காம் சேர்க்கை குறித்து விசாரித்திருக்கிறார். ஆனால் முன்னேறிய வகுப்பினைச் சேர்ந்த, ஏறக்குறைய 60 மாணவிகள் நான்கு பாடங்களில் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், அந்தப்பெண்ணுக்கு இடம் கிடைப்பதை பற்றி உறுதியாக ஏதும் கூற முடியாது என்றும், 21-ஆம் தேதி கல்லூரியில் தரவரிசை பட்டியல் தயாராகும் வரை பொறுத்திருக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

மறுநாள் மற்றொரு அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியை அந்த மாணவி அணுகிய பொழுது ஏன் முதல் நாளே வரவில்லை என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவி மற்றொரு கல்லூரியில் சேர முயற்சித்ததை பற்றிக் கூறிய உடன், 'அப்படியானால் எங்கள் கல்லூரி உனது முதல் தேர்வில் இல்லை என்று ஆத்திரப்பட்ட அவர்கள், தற்பொழுது அரசு நிதி மற்றும் சுயநிதி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இடம் காலி இல்லை. சுயநிதி பிரிவில் இடம் பெற்றுள்ள யாராவது வெளியேறினால் அந்த இடம் உனக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளனர். 

ஆனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு வகுத்து அளித்துள்ள விதிமுறைகளின் படி, ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான தினத்திலிருந்து பத்தாவது நாள்தான் மாணவர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கடைசி நாளாகும். 14-ஆவது நாளன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும். முடிவுகள் வெளியான  15 முதல் 20  நாட்களுக்குள் கலந்தாய்வு நடைபெற வேண்டும். 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பல்கழைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிச்சாண்டி, 'துணைவேந்தர் இந்த விவகாரத்தில் தலையிட்டு முடிவெடுக்க இதுதான் சரியான தருணம். குறிப்பிட்ட மாணவர்களிடம் இருந்து அவர்களது விண்ணப்பங்களை பெற்று, அவர்கள் விண்ணப்பித்திருந்த கல்லூரியிலேயே சிறப்பு பிரிவு ஒன்றின் கீழ்  இடம் கிடைக்க செய்ய வேண்டும். இது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும்.

இது போன்று மாணவர்களுக்கு நேரும் மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியிலான பிரச்சினைகளில் இருந்து விடுபடவே 'இணைய வழி ஒற்றைச் சாளர விண்ணப்ப முறை' கொண்டு வரப்பட  வேண்டும் என கடந்த ஏழு ஆண்டுகளாக எங்களது அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது' என்று தெரிவித்தார்.

இறுதியாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, 'கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரங்களில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரி நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதே போல பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சேர்க்கையில் ஐந்து சதவீத இலவச இடங்களை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com