தன்னைப் பாராட்டிய ரஜினிகாந்துக்கு அவர் பாணியிலேயே நன்றி தெரிவித்த ஸ்டாலின்

சிறந்த நிர்வாகி என என்னைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவிப்பது குறித்து அவரது பாணியில் சொல்வதென்றால் "மகிழ்ச்சி” என்று கூறினார் மு.க. ஸ்டாலின்.
தன்னைப் பாராட்டிய ரஜினிகாந்துக்கு அவர் பாணியிலேயே நன்றி தெரிவித்த ஸ்டாலின்


சென்னை: சிறந்த நிர்வாகி என என்னைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவிப்பது குறித்து அவரது பாணியில் சொல்வதென்றால் "மகிழ்ச்சி” என்று கூறினார் மு.க. ஸ்டாலின்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (19-05-2017) கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண்-67, அகரம் - துறையூர் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்றோடு நான் சட்டமன்ற உறுப்பினராகி ஓராண்டு காலம் நிறைவடைகிறது. இந்த தொகுதியில் நான் பல நேரங்களில் ஆய்வு செய்தபோது,  மக்களுடைய கோரிக்கைகளை, அவர்கள் தந்திருக்கின்ற மனுக்கள் எல்லாம் பெற்று, அவர்கள் வைத்த கோரிக்கைகளை படிப்படியாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நிறைவேற்றி வருகிறேன். 

 கேள்வி: திமுக தலைவர் கலைஞர் அவர்களின் வைரவிழா பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது? இதில் அவர் கலந்துகொள்வாரா?
ஸ்டாலின்: இதுகுறித்து நான் ஏற்கனவே பலமுறை பதிலளித்திருக்கிறேன். கருணாநிதி அவர்களின் 60 ஆண்டுகால சட்டமன்ற பணிகளை பாராட்டி வைரவிழாவாகவும், அவரது பிறந்தநாளையும் இணைத்து மிகப்பெரிய விழாவாக, வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி கொண்டாட இருக்கிறோம். அதில் வட மாநிலங்களைச் சேர்ந்த, அகில இந்திய அளவிலான சில முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வாரா, கலந்து கொள்ள மாட்டாரா என விவாதமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. நிச்சயமாக, உறுதியாக அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஒருவேளை மருத்துவர்கள் அனுமதி தந்தால் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கும்.

கேள்வி: அகில இந்திய அளவில் தலைவர்களை நீங்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பீர்களா?
ஸ்டாலின்: நாடாளுமன்ற குழுவின் தலைவர் சகோதரி கனிமொழி, திருச்சி சிவா, ஆலந்தூர் பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் போன்றவர்கள் நேரடியாக பல தலைவர்களை சந்தித்து என்னுடைய கடிதத்தை வழங்கி விட்டு வந்திருக்கிறார்கள். இன்றோ அல்லது நாளையோ உறுதி செய்யப்பட்டு முறைப்படி வெளியிடப்படும்.

கேள்வி: வருமான வரித்துறை ரெய்டு தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
ஸ்டாலின்: வருமான வரித்துறை ரெய்டுகள் முறையாக - சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் நடந்தால் உள்ளபடியே நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால், திட்டமிட்டு அரசியல் நோக்கத்தோடு ஒரு கட்சியை உடைப்பதற்கு, பிறகு உடைந்த கட்சியை இணைப்பதற்கு பயன்படுத்தினால் அதை நாங்கள் ஏற்க முடியாது.

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உங்களை மிகச்சிறந்த நிர்வாகி என தெரிவித்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஸ்டாலின்: அவருடைய பாணியிலே, மொழியிலே நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால், “மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com