வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை

வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வாணியம்பாடி பகுதியில் பலத்த சூறைக் காற்றால் தூக்கி வீசப்பட்ட வெள்ளக்குட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரை.
வாணியம்பாடி பகுதியில் பலத்த சூறைக் காற்றால் தூக்கி வீசப்பட்ட வெள்ளக்குட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரை.

வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடை காலம் தொடங்கியது முதற்கொண்டு, வேலூர் மாவட்டம் முழுவதிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் பகல் வேளைகளில் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.
வேலூரில் வியாழக்கிழமை 109.8 டிகிரி வெப்பம் பதிவான நிலையில் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மிதமான மழை பெய்தது இதமான சூழலை உருவாக்கியது.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மீண்டும் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனையடுத்து அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கோடியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, அனைத்து இடங்களிலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஏலகிரியில் சாரல் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
ஏலகிரி மலையில் சாரல் மழை பொழிந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரியில் சாரல்மழை பெய்தது. இதனால் அங்கு வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது. கோடை விடுமுறையொட்டி, ஏலகிரியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
புதன்கிழமை பெய்த மழையால் தட்ப வெப்ப நிலை குறைந்துள்ளது. அங்குள்ள படகுத் துறை, பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
வருகிற 27, 28-ஆம் தேதிகளில் ஏலகிரியில் கோடை விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆம்பூரில்...
ஆம்பூர் பகுதியில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் திடீரென சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
3 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து கொண்டியிருந்தது. மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக சோமலாபுரம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஆம்பூர் பகுதியில் சுமார் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில்...
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மாலை திடீரென மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேட்டவலம், ஆவூர் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் 2 மரங்கள் திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் அரசுப் பேருந்துகள், லாரிகள் நின்றதால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போளூரில்...
போளூர் பகுதியில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போளூர், திருசூர், வசூர், பொத்தரை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.
தற்போது பெய்துள்ள இந்த மழையால் கால்நடைகளுக்கு அதிக அளவில் புல் கிடைக்கும். மேலும், கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது என்றனர்.


வேட்டவலம் அருகே சாலையில் விழுந்த புளிய மரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com