கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்கு: தனியார் டி.வி.க்கு அந்நிய முதலீடு பெற்ற விவகாரம்

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுத் தர உதவியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ
கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்கு: தனியார் டி.வி.க்கு அந்நிய முதலீடு பெற்ற விவகாரம்

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுத் தர உதவியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ தொடுத்துள்ள வழக்கு அடிப்படையில் மத்திய அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளது.
ரூ. 305 கோடி முதலீடு: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவுகளின்படி வெளிநாட்டு முதலீடு தொடர்புடைய விவகாரங்களில் முறைகேடுகள் காணப்பட்டால் அதை மத்திய அமலாக்கத் துறை விசாரிக்கும். அந்த வகையில், ரூ. 305 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டை ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக பெற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, கார்த்தி, அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் நிறுவன இயக்குநர் பத்மா விஸ்வநாதன் உள்ளிட்டோர் மீது சிபிஐ கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தது.
இதைத்தொடர்ந்து மேற்கண்டவர்கள் மீது அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை பதிவு செய்தது.
சிபிஐ சோதனை: இந்த விவகாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை, குருகிராம், மும்பை உள்ளிட்ட நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் கார்த்தி சிதம்பரம், அவரது தந்தையும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம் வசித்துவரும் வீடு, அலுவலகங்கள் உள்பட நாடு முழுவதும் 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சாதகமாக அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் அனுமதியை பெற அந்நிறுவன உரிமையாளர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் கார்த்தியை அணுகினர்.
இதையடுத்து தனது செஸ் மேலாண்மை நிறுவனம் மூலம் ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு கார்த்தி உதவினார். இதற்கான ஆலோசனை கட்டணத்தை தனது செஸ் நிறுவனம் மூலம் பெறாமல், தனக்கு நெருக்கமானவர்கள் நடத்தி வரும் அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் நிறுவனம் மூலம் ரூ. 10 லட்சம் கட்டணம் பெற்றுள்ளார். இதன் மூலம் அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் நிறுவனத்தை கார்த்தி மறைமுகமாக கட்டுப்படுத்தி வந்துள்ளதாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை குற்றம்சாட்டியுள்ளன.
கார்த்தி சிதம்பரம் கடிதம்: இதற்கிடையே, ரூ.2,262 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி மோசடி செய்தது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த வாசன் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக 30 நாள்களுக்குள் பதில் அளிக்குமாறு வாசன் ஹெல்த்கேர் நிறுவனம், கார்த்தி சிதம்பரத்துக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், அமலாக்கத் துறைக்கு கார்த்தி சிதம்பரம் சார்பில் வெள்ளிக்கிழமை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ள ஆவணங்கள், சொத்து மதிப்பீடுகள் உள்ளிட்ட ஆவணங்களை படித்துப் பார்க்க அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு அமலாக்கத் துறை நோட்டீஸுக்கு பதில் அளிக்க கூடுதலாக 30 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும்' என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com