காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை: ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர்!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டுப் பெய்துவரும் மழை காரணமாக வறண்டு கிடந்த ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல் பிரதான அருவியில் சனிக்கிழமை விழுந்த தண்ணீர்.
ஒகேனக்கல் பிரதான அருவியில் சனிக்கிழமை விழுந்த தண்ணீர்.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டுப் பெய்துவரும் மழை காரணமாக வறண்டு கிடந்த ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கூடியிருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் சுமார் 3 மாதங்களுக்கு மேலாகவே கடுமையான வறட்சியால் அருவிகளில் தண்ணீரின்றி வெறிச்சோடிக் கிடந்தது.
இதனால், ஒகேனக்கல்லை நம்பி வாழ்ந்து வரும் மீன் பிடித் தொழிலாளர்கள், உணவு சமைக்கும் பெண்கள், பரிசல் ஓட்டுநர்கள், மசாஜ் தொழிலாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஒகேனக்கல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழைப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக, ஒகேனக்கல் வனப் பகுதி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, தேரிட்டி பகுதிகளிலும் மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது.
இதனால் முற்றிலும் வறண்டிருந்த ஒகேனக்கல் அருவிகளில் சனிக்கிழமை தண்ணீர் விழுந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் தொடங்கியுள்ளது. பிரதான அருவி மட்டுமின்றி, சினிஃபால்ஸ் என்றழைக்கப்படும் பகுதியிலும் பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பரிசல்கள் இயக்கப்பட்டன. சுத்தமாக வேலையின்றி இருந்த மசாஜ் தொழிலாளர்களும், மீன் சமையல் பணியாளர்களுக்கும் சனிக்கிழமை வேலை இருந்தது. இதேநிலை தொடர்ந்து, கோடை விடுமுறையின் கடைசி வாரமாவது நம்பிக்கை தரும் வகையில் இருக்கும் என்கின்றனர் அவர்கள்.
தண்ணீர் அளவு: ஒகேனக்கல் காவிரியாற்றில் நொடிக்கு 350 கன அடி தண்ணீர் வருவதாக பொதுப்பணித் துறை எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த இரு நாட்களில் 50 முதல் 60 கனஅடி தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.
தண்ணீரில் விழுந்த பெண்: சினிபால்ஸ் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சனிக்கிழமை காலை 10 மணியளவில் அருவியில் விழுந்தார். இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொங்கு பாலம் பகுதியில் தீயணைப்புத் துறையினரும், பொதுமக்களும் இணைந்து தண்ணீரில் அடித்து வரப்பட்ட அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர். பேச முடியாத நிலையில் இருக்கும் அந்தப் பெண் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை முடித்து, மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மழைப்பொழிவு

வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவு விவரம் (மிமீ-யில்): அரூர்- 43.2, ஒகேனக்கல்- 30.4, மாரண்டஅள்ளி- 6, பாலக்கோடு- 5, பென்னாகரம்- 3, பாப்பிரெட்டிப்பட்டி- 2, ஆட்சியரகம்- 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com