ஜெயலலிதா காட்டிய வழியிலேயே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியிலேயே தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு மலர்களைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள்.
காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு மலர்களைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியிலேயே தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 121-ஆவது மலர்க் காட்சியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
நீலகிரியை மலைகளின் அரசி என்று கூறுவர். ஆனால், இந்த அரசிக்கு மகுடம் சூட்டியது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. ஆசிய துணைக் கண்டத்திலேயே எங்குமில்லாத அற்புதமான 4,000 ரகங்களைக் கொண்ட ரோஜா தோட்டத்தை வழங்கியவர் அவரே. பைக்காரா இறுதி நிலை புனல் நீர் மின் திட்டத்தையும் அவரே அளித்தார்.
நீலகிரி சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 8 கோடியே 22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூ. 5 கோடியில் நஞ்சநாடு தேயிலைத் தொழிற்சாலை, ரூ. 5 கோடியே 40 லட்சத்தில் அரசுத் தேயிலைத் தொழிற்சாலைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. உதகை படகு இல்லம் ரூ. 6.89 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தாவரவியல் பூங்காவை மேம்படுத்த ரூ. 8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உதகையில் வாழும் பழங்குடியின மக்களான தோடர், இருளர், குரும்பர், கோத்தர், பணியர், காட்டுநாயக்கர் என 6 பழங்குடியினத்தவர்களைப் பெருமைப்படுத்த ரூ. 15 கோடியில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நலத் திட்டங்களை ஜெயலலிதாவின் வழியில் செயல்படுத்தி வரும் இந்த அரசானது அவர்களின் நலனுக்காகவே பாடுபடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
உதகை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து உதகை பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை இயக்குநர் அர்ச்சனா பட்நாயக் வரவேற்றார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தோட்டக்கலைத் துறை ஆணையர் ககன் தீப்சிங் பேடி, மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுனன், ஏ.கே.செல்வராஜ், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அ.ராமு, கணேஷ், கஸ்தூரி வாசு, கனகராஜ், தமிழ்நாடு ஆவின் இணையத் தலைவர் அ.மில்லர், மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவர் அ.பாரி, துணைத் தலைவர் தீபக் டமோர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் நன்றி கூறினார்.
சட்டப் பேரவை விரைவில் கூட்டப்படும்: தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசின் மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக சட்டப் பேரவை விரைவில் கூட்டப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்த திட்டமான சிள்ளள்ளா நீர்மின் திட்டம் எவ்விதத் தொய்வுமின்றி விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து, நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாகவும், தமிழக அரசின் நிதி நெருக்கடி குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
முதல்வர் சொன்ன குட்டிக்கதை
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர்க் காட்சித் தொடக்கவிழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குட்டிக் கதை கூறினார்.
ஒரு பக்தர் காட்டில் கடும் தவம் புரிந்தார். கையில் கதாயுதத்தோடு அவன் கண் முன்னே கடவுள் திடீரென்று தோன்றி, பக்தா, உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். அதற்கு பக்தர், கடவுளே என் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் எதிரிகளை உங்கள் கதாயுதத்தால் தாக்கி, வீழ்த்தி அழிக்க வேண்டும் என்று வேண்டினார். கடவுளும் அவ்வாறே வரம் கொடுத்தார்.
சற்று நேரம் கழித்து கதாயுதம் மட்டும் காற்றில் பறந்து வந்து வரம் கேட்ட பக்தரின் மார்பைத் தாக்கியது. அதிர்ச்சியடைந்த பக்தர், குறி தவறி வந்து, வரம் கேட்ட என்னையே இந்த கதாயுதம் தாக்குகிறதோ என்ற அச்சத்தில் மீண்டும் தவம் மேற்கொண்டார்.
அவருக்கு இறைவன் மீண்டும் காட்சியளித்தார். அப்போது, பக்தரே, நீ கேட்டபடிதான் நான் கதாயுதத்தை வீசினேன். மற்றவர்களை அழித்து நீ முன்னேற நினைக்கும் உன் மனம்தான் உனக்குப் பகை என்பதால்தான் என் கதாயுதம் உன் எண்ணத்தை அழிக்க முற்பட்டது. இப்போது உன் தீய எண்ணத்தை விட்டொழித்தாயா என்று கேட்டார்.
தர்மத்தைப் பற்றிய பேசுகிறவர்கள் அதர்மம் செய்தால், மக்கள் கதாயுத வடிவத்தில் வந்து பாடம் கற்பிப்பார்கள். நன்றியுடன் நடந்து கொள்வதே ஒரு தர்மம்தான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com