கொடைக்கானலில் சிறிய விமான தளம் அமைக்கப்படும்: அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

கொடைக்கானலில் சிறிய விமான தளம் அமைக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
கொடைக்கானலில் சிறிய விமான தளம் அமைக்கப்படும்: அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

கொடைக்கானலில் சிறிய விமான தளம் அமைக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற கோடை விழா மற்றும் மலர்கண்காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். முன்னதாக விழாவை தொடக்கி வைத்து மலர்க் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை அறிந்து தமிழக அரசு பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கொடைக்கானல் நகராட்சிக்கு மட்டும் நடப்பாண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ55 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே போல் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. வனத்துறை மூலம் 75 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து 124 விவசாயிகளின் நிலங்களில் இலவசமாக நடவு செய்யப்பட்டுள்ளன. தனியார் விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், கொடைக்கானல் வனக்கோட்டத்துக்குள்பட்ட மாட்டுப்பட்டி, கோவில்பட்டி, பெரும்பள்ளம், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட 9 கிராமங்களை தேர்வு செய்து 1 லட்சத்து 15 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. அத்துடன் புதிதாக 4 தடுப்பணைகள் கட்டப்பட்டு வன உயிரினங்களின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கீழ்குண்டாறு பகுதியில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ47 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கொடைக்கானல் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும். கொடைக்கானலில் சிறிய விமான தளம் அமைப்பதற்கும் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வேளாண்மை உற்பத்தி மற்றும் அரசு முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, உதயக்குமார் எம்பி, பழனி சார்- ஆட்சியர் வினித், எம்எல்ஏக்கள் பரமசிவம், தங்கதுரை, மாவட்ட வனத்துறை அதிகாரி நாகநாதன், மாவட்ட வன அலுவலர் முருகன், நகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com