காளீஸ்வரி நிறுவனம் ரூ.90 கோடி வருவாய் மறைப்பு: வருமானவரித்துறை தகவல்

வருமான வரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக பிரபல சமையல் எண்ணெய் நிறுவனமான காளீஸ்வரி நிறுவன தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என சுமார்

வருமான வரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக பிரபல சமையல் எண்ணெய் நிறுவனமான காளீஸ்வரி நிறுவன தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என சுமார் 54 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனை செய்தனர். இதில், ரூ.90 கோடி வருவாய் மறைப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை ஒத்தவாடி ஜெகதாம்பாள் காலனியில் தனியார் சமையல் எண்ணெய் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சூரிய காந்தி ரீபைண்ட் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு சமையல் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது.

சென்னை மேடவாக்கம் வேங்கைவாசல், விருதுநகர், பழனி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோவா ஆகிய இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள இந்த நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி வரை வணிகம் செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்தத் தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அந்த சமையல் எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் என 55 இடங்களில் கடந்த நான்கு தினங்களாக ஒரே நேரத்தில் சோதனை செய்தனர்.

ராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் முனுசாமி வீடு, அங்குள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், வேங்கைவாசலில் உள்ள சுத்திகரிப்பு ஆலை, வண்ணாரப்பேட்டையில் உள்ள கிட்டங்கி, நகைக்கடை என சென்னையில் மட்டும் 37 இடங்களில் நடைபெற்றது.

அதேபோல தமிழகத்தைத் தவிர்த்து மும்பை, கோவா, பெங்களூரு, காக்கிநாடா ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களிலும், ஆலைகளிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

இச் சோதனையில் அந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், வரி செலுத்தாமல் ரூ.90 கோடி வருவாய் மறைப்பு செய்துள்ளதாகவும், வரி ஏய்ப்புக்கான தொகை மற்றும் அபதார தொகையும் திரும்பி செலுத்த காளீஸ்வரி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com