தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூடுகிறது!

மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் உள்ளாட்சி தேர்தல்
தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூடுகிறது!

சென்னை: மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 23ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

அன்றைய தினம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதன் பிறகு, மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டப்பேரவையில், 2017 - 2018 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் அதே மாதம் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அன்றே பேரவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுவாக, பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் தொடர்ச்சியாக, அரசு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடை பெறுவது வழக்கம். ஆனால், மானிய கோரிக்கை மீதான விவாதத்தை, சூழ்நிலை கருதி சில மாதங்கள் கழித்து பேரவையை கூட்டி நடத்த அவை விதிகளில் இடம் உள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் சட்டப்பேரவை கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பணப் பட்டுவாடா புகாரால் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்ட நிலையில் பேரவையை இன்னும் கூட்டப்படாமல் இருக்கிறது. அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள், உட்கட்சிப் பூசல் போன்ற காரணங்களால் பேரவை கூட்டப்படாமல் தள்ளிப்போனது.

இதற்கிடையே, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் நேரில் வலியுறுத்தினார். பின்னர் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பேரவைத் தலைவரிடம் இதே கோரிக்கையை முன்வைத்தனர். அதன்பிறகும் பேரவை கூட்டப்படவில்லை.

இதையடுத்து பேரவையை உடனடியாக கூட்ட பேரவைத் தலைவருக்கும் முதல்வருக்கும் உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதினார். ஆனால், பேரவையை கூட்டப்படாமல் கடந்த 11-ஆம் தேதி கூட்டத்தொடரை இறுதி செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது.

ஏனென்றால், இனி மானிய கோரிக்கை மீதான விவாதங்களை பேரவையில் நடத்துவதற்கு புதிதாக ஆளுநர் உத்தரவு பிறப்பித்தால் தான் முடியும்.

தமிழகத்தில் கடும் வறட்சி, குடிநீர் கட்டுப்பாடு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பெண்களின் தொடர் போராட்டம், விவசாயிகள் தற்கொலை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு பிரச்சினை உள்ளிட்ட பல் வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியிருப்பதால் பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரவை வைர விழாவை ஜூன் 3 ஆம் தேதி அவரது பிறந்த நாளில் கொண்டாட ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. அன்றைய தினம் பேரவை கூட்டம் நடந்தால் திமுக உறுப்பினர்கள் கருணாநிதியை புகழ்ந்து பாராட்டி பேசி, அது அவையில் பதிவாகும் என்பதால் அதைத் தவிர்க்கும் நோக்கில் பேரவை கூட்டப்படாமல் இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முதல்வர் கே. பழனிசாமி, பேரவை விரைவில் கூட்டப்படும் என்று தெரிவித்தார்.

சமீபத்தில் தில்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘தமிழ்நாடு மாநில ஜிஎஸ்டி மசோதா, வரும் ஜூன் மாதம் பேரவையில் தாக்கல் செய்யப்படும்’’ என தெரிவித்தார். அதனால், ஜூனில் பேரவை கூடும் என்று உறுதியானது.

இந்நிலையில், தமிழக பேரைவையை மீண்டும் கூட்ட அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிகிறது. ஜூன் 7 அல்லது 8 ஆம் தேதியில் கூட்டம் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.

சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.

இந்த பேரவை கூட்டத்தொடரில், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, நாளை (செவ்வாய்கிழமை) முதல் தினந்தோறும் துறை வாரியாக ஒவ்வொரு அமைச்சருடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். முதல் நாளில், தொழில்துறை அமைச்சர் மற்றும் அந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், துறை வாரியான நிதி ஒதுக்கீடு குறித்தும், புதிய அறிவிப்புகள் குறித்தும் முடிவு செய்யப்பட இருக்கிறது.  

தற்போது அனைத்து துறைகளிலும் மானியக் கோரிக்கைகளுக்கான கொள்கை விளக்க குறிப்புகளை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடை பெற்று வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com