ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறது என்ற குற்றச்சாட்டு தவறானது: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

பாரதிய ஜனதா கட்சி ரஜினியை வைத்து அரசியல் செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்றார் மத்திய கப்பல், தரைவழிப்

புதுக்கோட்டை: பாரதிய ஜனதா கட்சி ரஜினியை வைத்து அரசியல் செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்றார் மத்திய கப்பல், தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

புதுக்கோட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒரு கட்சியின் விழாவாகக் கொண்டாடினால் அதில் யாருக்கும் கருத்துச் சொல்ல உரிமை இல்லை.

ஆனால், இந்த விழா ஒரு பொது விழாவாக இல்லாமல், திரைமறைவில் கூட்டணி அமைப்பதற்கான விழாவாக இருப்பதால், எனக்கு மட்டுமல்ல 7 கோடி தமிழக மக்களுக்கும் அதுகுறித்து கேள்வி எழுப்ப உரிமை உள்ளது.

பிரதமரைச் சந்திக்க ஓபிஎஸ் தனியாகச் செல்லவில்லை. அவர் வைத்த கோரிக்கைகள் குறித்தும் தெரியாது.

பாஜக ரஜினியை வைத்து அரசியல் செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது. அவர் அரசியலுக்கு வந்தாலும், பாஜகவுக்கு வந்தாலும் வரவேற்போம்.

நாட்டின் பாதுகாப்பு குறித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் குற்றச்சாட்டு தவறானது. நாட்டின் பாதுகாப்புக்காக பிரதமர் எந்தவிதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

நாட்டின் சொத்தை யாரும் கொள்ளையடிக்க மோடி அரசு அனுமதிக்காது என்பதற்கான உதாரணங்களே வருமானத் துறையினரின் சோதனைகள்.

அரசியல் கெட்டுக்கிடக்கிறது என ரஜினி கூறியதற்கு கழகங்கள்தான் காரணம். இவற்றுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சி மட்டுமே உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் சொந்த செல்வாக்கை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்.

நெடுவாசலில் அப்பகுதி மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வராது என்ற உறுதிமொழி அப்படியே உள்ளது. மதுராவயல் பறக்கும் சாலை திட்டத்தில் வரைபடம் தயாராக உள்ளது.

கிழக்குக் கடற்கரைச் சாலைக்கான அனுமதிக்காக கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். அதற்காக மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடியை செலவழிக்க தயாராக உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com