சோதனைகளைக் கடந்து ஓராண்டை நிறைவு செய்கிறது தமிழக அரசு

முதல்வர் ஜெயலலிதா மரணம், ஆளும் அதிமுகவில் பிளவு என பல்வேறு சோதனைகளைக் கடந்து ஓராண்டை நிறைவு செய்கிறது தமிழக அரசு.
சோதனைகளைக் கடந்து ஓராண்டை நிறைவு செய்கிறது தமிழக அரசு

முதல்வர் ஜெயலலிதா மரணம், ஆளும் அதிமுகவில் பிளவு என பல்வேறு சோதனைகளைக் கடந்து ஓராண்டை நிறைவு செய்கிறது தமிழக அரசு.

கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் 134 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக அதிமுக திகழ்ந்தது.
இந்தத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்ற பெருமையை அதிமுகவும், ஆறாவது முறையாக முதல்வர் என்ற சாதனையை கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் பெற்றனர்.
கடந்த 2016 மே 23-இல் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த விழாவில் முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா.
சோதனை மேல் சோதனை: இதன்பின் நேராக தலைமைச் செயலகம் சென்று டாஸ்மாக் கடைகள் மூடல் உள்பட ஏழு முக்கிய திட்டங்களுக்குக் கையெழுத்திட்டார்.
சுமுகமாகச் சென்று கொண்டிருந்த அதிமுக அரசில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவு தேக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த அவர் டிசம்பர் 5-இல் காலமானார்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
ஆனால், ஜெயலலிதா தலைமையில் இருந்த அதே அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதேசமயம், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், பிப்ரவரி 5-ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்தார். வி.கே.சசிகலாவை அதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்தனர். ஆனால், சசிகலாவுக்கு பதவிப் பிரமாணத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் செய்து வைக்கவில்லை.
முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்பு: இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரவே சசிகலா பெங்களூரு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி 16-இல் புதிய முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்றுப் பெரும்பான்மையை சட்டப் பேரவையில் நிரூபித்தார்.
அவரது தலைமையில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி தனது ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
பல்வேறு சோதனைகளுக்கு இடையே பல முக்கியத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று வருகிறது. மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவது, டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடுவது என்ற பல்வேறு கொள்கை முடிவுகளையும் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் கடுமையான நிதி நெருக்கடிச் சூழல்களுக்கு இடையே தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com