தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு மோடிக்கு அழைப்பு: முதல்வர் பழனிசாமி தகவல்!

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு மோடிக்கு அழைப்பு: முதல்வர் பழனிசாமி தகவல்!

தமிழக சட்டசபையில் விரைவில் நடைபெற உள்ள ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு மோடிக்கு அழைப்பு: விடுக்கப்பட்டுள்ளது என்று தில்லியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுதில்லி: தமிழக சட்டசபையில் விரைவில் நடைபெற உள்ள ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு மோடிக்கு அழைப்பு: விடுக்கப்பட்டுள்ளது என்று தில்லியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி மற்றும் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தமிழகத்திற்கான திட்ட நிதி மற்றும் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவதற்காக, பிரதமர் மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். தமிழகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்தோம். அது போல மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில், தமிழக மாணவர்களுக்கும் 'நீட்'  தேர்வு என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். தமிழகத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்க ஒப்புதல் தர வேண்டும் என்று கோரப்பட்டது.

வறட்சியில் வாடும் தமிழக விவசாயிகளுக்கு விரைவில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குமாறு மத்திய நிதித்துறை வாயிலாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். தமிழகத்தின் காவேரிப்படுகைப் பகுதியை வளமுள்ளதாக மாற்ற, புத்துருவாக்கம் செய்ய ரூ.14500 கோடி செலவில் புதிய திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

அதே போல கேரள அரசானது பவானி நதியின் குறுக்கே அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டி வருகிறது. இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு கேரளா அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்துதல் குழுவினை விரைந்து அமைக்க வேண்டும்.

கேரளாவின் பம்பா, அச்சன் கோவில் மற்றும் வைப்பார் ஆறுகளில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பும் வகையில் கேரள அரசானது திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும். இதன் காரணமாக கேரள அரசுக்கு மின்சாரமும், தமிழகத்திற்கு நீரும் கிடைக்கும்.இரு மாநிலங்களுக்கும் இது பயனளிக்கும் என்பதை அம்மாநில அரசுக்கு உணர்த்த வேண்டும்.  

தமிழக நீர் ஆதாரங்களை சிறப்பான வகையில் பராமரிக்கும் நீர் மேலாண்மை திட்டங்களின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்து திட்டத்திற்கு தற்பொழுது ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு திட்டத்தினை போல இதனை பரவலாக்க மேலும் 300 கோடி அளவுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு 2017-18 நிதியாண்டில் மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.  

தமிழகத்தில் மத்திய அரசு உதவியுடன் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கான நிதியாக ரூ.17000 கோடியினை விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ள 135 படகுகள் மற்றும் 11 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பிரதமருடனான எனது கடைசி சந்திப்பின் பொழுது மீன்வளத்தினை பெருக்க ரூ.200 கோடி நிதி கேட்டு கோரிக்கை வைத்திருந்தேன். அதனை ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்.  இந்த திட்டத்தில் தமிழக அரசு தன் பங்காக ரூ.86 கோடியை ஒதுக்கியுள்ளது.

மேலும் தமிழக சட்டசபையில் விரைவில் நடைபெற உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு மோடிக்கு அழைப்பு: விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்பொழுது மாவட்ட தலைநகரங்களில் கொண்டாடாத் திட்டமிடப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக, டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் பெரிய விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான சந்திப்பில் எந்த விதமான அரசியல் நோக்கமும் இல்லை.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதல்வர், தமிழக தென்னை விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரண தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com