பாகூர் அருகே மதுபானக் கடைகள் திறக்க எதிர்ப்பு: சாலை மறியல், தடியடி, கடைகளை சூறையாடி தீவைப்பு

பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் மதுக்கடைகளை கூடுதலாக திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்பகுதி மக்கள் கடைகளை சூறையாடி தீவைத்தனர்.

பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் மதுக்கடைகளை கூடுதலாக திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்பகுதி மக்கள் கடைகளை சூறையாடி தீவைத்தனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

நெடு்ஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து புதுச்சேரியில் மொத்தம் 164 கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை மாற்று இடங்களில் திறக்க கலால்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதியில் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

கடலூர் மாவட்ட எல்லையையொட்டி தென்பெண்ணையாற்றின் கரையில் சோரியாங்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு ஏற்கெனவே 10 மதுக்கடைகள் மற்றும் 1 சாராயக் கடை இயங்கி வருகிறது. இவற்றால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என அ்பபகுதி மக்கள் புகார் எழுப்பிய நிலையில் சில நாள்களுக்கு முன்பு அங்கு மேலும் புதிதாக 5-க்கு மேற்பட்ட மதுக்கடைகளைத் திறக்க ஏற்பாடுகள் நடந்ததாகத் தெரிகிறது.

புதிய கடைகளை திறக்கக் கூடாது, ஏற்கெனவே உள்ள கடைகளை உடனே மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் அவை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிளவில் கடைகளை மூடுமாறு கூறி அப்பகுதி மக்கள் சோரியாங்குப்பம் சாவடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் சாராயக்கடையை தாக்கி சூறையாடினர். இதனால் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். 

இதனால் கொதிப்புற்ற 200-க்கு மேற்பட்டோர் 10 மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் மர்ம நபர்கள் சிலர் 3 மதுக்கடைகளுக்கு தீவைத்தனர். இதனால் அவை தீக்கிரையாகின. மேலும் கடைகள் மீது கல்வீசி தாக்கினர்.

பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பொதுமக்கள் சிதறி ஓடினர். மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த நூற்றுக்கு மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட சிலரை போலீஸார் பிடித்துச் சென்றுள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரியும், மேலும் சிலரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. 
மேலும் காலை 10 முதல் தொடர்ந்து மறியல் நடந்து வருகிறது.

பிரச்னை நடைபெற்ற சோரியாங்குப்பம் கிராமத்தில் சீனியர் எஸ்பி ராஜிவ் ரஞ்சன், எஸ்.பி அப்துல் ரஹீம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
முதல்வர் ஆலோசனை:
சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர் சோரியாங்குப்பம் கலவரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் டிஜிபி சுனில்குமார் கௌதம், சீனியர் எஸ்.பி. ராஜிவ் ரஞ்சன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பின்னர் டிஜிபி கௌதம் கூறியதாவது: 
சோரியாங்குப்பத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மதுக்கடைகளுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com