பாஜகவுக்கு வந்தால் உரிய அங்கீகாரம் அளிக்கப்படும்: ரஜினிக்கு தனிக் கட்சி சாத்தியமில்லை

நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கினால் வெற்றி பெற முடியாது என, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக மண்டலத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக மண்டலத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கினால் வெற்றி பெற முடியாது என, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். பாஜகவில் சேருவது மட்டுமே அவருக்கான சரியான தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மண்டல தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
பாஜகவில் இணைய பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் விருப்பம் தெரிவித்து இணைந்து வருகின்றன. இந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என அகில இந்திய தலைமையும், தமிழக பாஜகவும் விருப்பம் தெரிவித்தது. ஆனால், நல்லகண்ணு, ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் என அனைத்து தலைவர்களும் பதற்றம் அடைந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு, நக்மா உள்ளிட்ட பிரபலங்கள் தேவையாக இருக்கும்போது, நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக அழைப்பு விடுத்ததில் தவறில்லை.
ரஜினி அரசியலுக்கு வரலாம் எனத் தீர்மானித்துவிட்டால் பாஜகவில் சேருவது மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் என்பது வெளிப்படையான கோரிக்கை. தனிக் கட்சி தொடங்கினால் வெற்றி பெற முடியாது. அதற்காக போர் வரட்டும் என காத்திருக்கவும் முடியாது. போர் என்றால் தலைவன் அதற்கு மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக வேண்டும். மேலும், வீரர்களையும், தொண்டர்களையும் தயார்படுத்த வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்லாது தமிழகத்தில் பாஜகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் நல்லவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். கட்சியில் சேரும் புதியவர்களுக்கு (ரஜினி உள்பட) உரிய அங்கீகாரம் அளிக்கப்படும். ரஜினிக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்துவது அவசியமற்றது.
ஆளும்கட்சிக்கு ஆபத்து: தமிழகத்தில் திறமையான ஆளுங்கட்சியும் இல்லை; திறமையான எதிர்க் கட்சியும் இல்லை. அதிமுக ஆட்சியில் மாநிலம் எந்தவித வளர்ச்சியும் பெறவில்லை. மாறாக ஊழல் மலிந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து 2ஆம் ஆண்டு, 3ஆண்டு கொண்டாட்டம் அதிமுக அரசுக்கு நீடிக்காது. இருப்பினும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நிலையாக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக காலதாமதம் செய்யக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி நிலையான உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வழிகாண வேண்டும்.
பொய்க் குற்றச்சாட்டு: தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறுவது ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டு. பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தமிழக அரசு பயன்படுத்தாமல் திரும்ப வழங்கும் நிலைதான் உள்ளது. ரஜினி, ஓபிஎஸ், இபிஎஸ் என யாருடைய பின்னணியிலும் பாஜகவின் பங்களிப்பு இல்லை. பாஜக மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றார் அவர்.
தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் அ. தயாசங்கர் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி, கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், அமைப்புச் செயலர் எஸ். கிருஷ்ணன், வழக்குரைஞர் பாலாஜி கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com