நாட்டிலேயே வடலூரில்தான் மிகப் பெரிய அன்னதானம்: ஊரன் அடிகளார்

நாட்டிலேயே வடலூரில்தான் மிகப் பெரிய அளவில் அன்னதானம் நடைபெற்று வருகிறது என்று ஊரன் அடிகளார் தெரிவித்தார்.
வடலூரில் நடைபெற்ற 32-ஆவது திருஅருட்பா இசை விழாவில் நாட்டிய நிகழ்ச்சி நடத்திய வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரி மாணவிகளுடன் தினமணி ஆசிரியர் கி.வைத்த
வடலூரில் நடைபெற்ற 32-ஆவது திருஅருட்பா இசை விழாவில் நாட்டிய நிகழ்ச்சி நடத்திய வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரி மாணவிகளுடன் தினமணி ஆசிரியர் கி.வைத்த

நாட்டிலேயே வடலூரில்தான் மிகப் பெரிய அளவில் அன்னதானம் நடைபெற்று வருகிறது என்று ஊரன் அடிகளார் தெரிவித்தார்.
வடலூரில் திருஅருட்பா இசைச் சங்கம் சார்பில் வள்ளலார் பெருவெளித் திடலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற 32-ஆவது திருஅருட்பா இசை விழாவில் தஞ்சை இனியா செந்தில்குமார், சென்னை சாமகானம் டிஆர்.ராம்குமார் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டுச் சிறப்புரை நிகழ்வில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் சிறப்புரையாற்றினார்.
விழாவில் ஊரன் அடிகளார் வாழ்த்திப் பேசியது:
வடலூரில் அணையா விளக்கேற்றிய 150-ஆவது ஆண்டு விழாவில் வாழ்த்திப் பேசுவதில் பெருமை கொள்கிறேன். இதில், இரண்டு விஷயங்களைப் பேச வேண்டும். ஒன்று தருமசாலை 150-ஆவது ஆண்டு நிறைவு, இரண்டு திருஅருட்பா இசை விழாவைப் பற்றியதாகும்.
சென்னையில் 35 ஆண்டுகள் வசித்த வள்ளலார் நடராஜரை தரிசிக்கவே சிதம்பரத்துக்கு வந்தார். அவர் முருக பக்தராகவும், பின்னர் சிவ பக்தராகவும் விளங்கியவர். நடராஜர் மீது மையங்கொண்டதால் இங்கே வந்தருளினார்.
அருகே உள்ள கருங்குழியில் 9 ஆண்டுகள் தங்கி வழிபட்டார். 1865-இல் சன்மார்க்க சங்கத்தைத் தொடங்கினார். துறவிகள் என்றாலே மடங்களைக் கட்டுவர். சிலர், ஆசிரமம் அமைப்பார்கள்.
வள்ளலார் தனிச் சிறப்பாக சங்கத்தை ஏற்படுத்தினார். மடத்தில் ஆண்கள் மட்டுமே இருப்பர். மடத்துக்கு ஆன்மிகப் பக்குவம் வேண்டும். சங்கத்துக்கு எதுவும் தேவையில்லை.
எல்லாரையும் ஈர்த்து, அவர்களை நல்வழிப்படுத்துவதே சங்கத்தின் பணியாகும்.
முதன்முதலில் புத்தரே ஆன்மிக சங்கத்தை தோற்றுவித்து, பௌத்தத்தை உலகில் கொண்டு சேர்த்தார்.
அதன்பிறகு, வள்ளலாரே ஆன்மிக சங்கத்தை நிறுவினார். சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தையும், சத்திய தருமசாலையையும் அவர் நிறுவினார்.
ஆன்மநேய ஒழுக்கம், சைவ உணவு, அற்றார் அழிபசி தீர்த்தல் பணிகளை சங்கம் செய்தது. அணையா தீபத்தை ஏற்றி வைத்து இறைவழிபாட்டையும், பசிதீர்த்தல் பணியையும் தொடங்கினார். தருமசாலையும், அணையா விளக்கும் 150 ஆண்டுகளாகத் தொடர்ந்து எரிந்து வருகிறது. இதுமட்டுமன்றி கருங்குழி, மேட்டுக்குப்பத்திலும் ஒளியை ஏற்றிவைத்தார்.
நாட்டிலேயே பெரிய அளவில் அன்னதானம் வடலூரில் மட்டுமே நடைபெறுகிறது. பசிக்கொடுமைதான் உலகில் பெரியது. கருவிலிருந்தே பசி தொடங்கி மரணம் வரை தொடர்கிறது.
புத்தர் ஆசையை விட வேண்டும் என்றார். வள்ளலார், உயிரைப் போக்கும் பசியாற்ற வேண்டும் என்றார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் இதை விளக்கியுள்ளார் வள்ளலார்.
வள்ளலார் என்றால் அன்னதானமும், ஜோதி தரிசனமும் ஆகும். மேலும், திருஅருட்பாவையும் வழங்கி வழிகாட்டியுள்ளார்.
திருஅருட்பா இசை விழா 32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருஅருட்பா பாடுவது பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.
கவிஞர் வைரமுத்து வள்ளலாரைப் பற்றி எழுதிய "வெள்ளை வெளிச்சம்' கட்டுரையை கோவையில் வெளியிட்டு தினமணி சிறப்பு செய்தது.
தமிழகம் தொடங்கி புதுதில்லி வரை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தினமணி சேவையாற்றி வருகிறது. தமிழால் இணைவோம் என்று புதுதில்லியில் 100 தமிழ் அமைப்புகளைச் சேர்த்து தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் விழாவை நடத்தி சிறப்பு செய்தார்.
தமிழ், பண்பாடு, கலாசாரத்தை வளர்த்து வரும் தினமணி போன்ற செய்தித்தாள்களை நாம் படித்துப் பயன்பெற வேண்டும் என்றார் ஊரன் அடிகளார்.
விழாவில், திருஅருட்பா இசை சங்கத்தின் தலைவர் ராதா.சீனுவாசன், பொதுச் செயலர் வாசவி.கு.பா.ஜோதி, பொருளாளர் வெ.ராமானுஜம், வள்ளலார் குருகுலம் பள்ளித் தாளாளர் ஆர்.செல்வராஜ், சீர்காழி சிவசிதம்பரம், இசைச் சங்க கட்டடக் குழுத் தலைவர் டி.எஸ்.கே.கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, ஓபிஆர் நினைவு கல்வியியல் கல்லூரி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

வள்ளுவரும் வள்ளலாரும்தான் தமிழினத்தின் வழிகாட்டிகள்
தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் பெருவெளித் திடலில் 32-ஆவது திருஅருட்பா இசை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
சிறப்புரையாற்றியபோது வள்ளுவரும் வள்ளலாரும் தான் தமிழினத்தின் வழிகாட்டிகள் என்று குறிப் பிட்டார்.
துறவறம் மேற்கொள்வது அவரவர் ஆன்மிகத் தேடலுக்காக. ஆனால், அப்படியல்லாமல் மக்கள் நலனுக்காகத் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட துறவிகளும் இருந்திருக்கிறார்கள்.
ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். தனக்குக் கிடைத்த உபதேசத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்த பெருமை அவருக்குண்டு. அதேபோல, மக்கள் சேவைதான் மகேசன் சேவை என்று கருதி தனது துறவறத்தை சாமானிய மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்த முற்பட்டவர் சுவாமி விவேகானந்தர்.
துறவறம் என்பது கடையேனுக்கும் கடைத்தேற்றமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் அனைவரது வயிற்றுப் பசியையும் தீர்க்க வேண்டும் என்று செயல்பட்டவர் அருட்பிரகாச வள்ளலார். அவர் தொடங்கிய சத்திய தருமசாலை 150 ஆண்டுகளைக் கடந்து 151}ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வள்ளல் பெருமான் வலியுறுத்திய இரண்டு முக்கியமான அறிவுரைகள், அற்றார் அழி பசி தீர்ப்பதும், சமரச சுத்த சன்மார்க்கமுமாகும்.
வள்ளலார் தந்த சமரச சுத்த சன்மார்க்கம் என்பது மதம், இனம், மொழி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் கடந்து எல்லோரையும் ஒருங்கிணைப்பது. அருட்பெரும்ஜோதி என்கிற அவருடைய தத்துவம் அனைத்து மதங்களின் தத்துவங்களையும், சாறுபிழிந்து எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.
பிரம்மம் அல்லது முழுமுதற் கடவுள் ஓம் என்கிற ஓங்கார ஒலியுடன் தோன்றிய ஒளிமயமான ஒன்று என்கிறது ரிக் வேதம். அதன் சாரம்தான் உருவமில்லாத ஒளி வடிவமான அருட் பெரும்
ஜோதி. அன்பே தெய்வம் என்கிறது விவிலியம். அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்கிறது வள்ளலாரின் கோட்பாடு. உருவமில்லாத எங்கும் நிறைந்த ஆண்டவன்தான் அல்லா என்கிறது திருக்குரான். அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை என்கிற அருவ வழிபாடு அதையேதான் வழிமொழிகிறது.
வள்ளுவப் பேராசானும், அருட் பிரகாச வள்ளலாரும் வலியுறுத்திக் கூறிய கோட்பாடு புலால் மறுத்தல். அண்ணல் காந்தியடிகளும் இதையேதான் வலியுறுத்தினார். அதற்குக் காரணம் இந்தியா போன்ற வெப்ப பூமியில் புலால் உணவு உடல் நலத்துக்கு தீங்கு என்பது மட்டுமல்ல, ஜீவ காருண்யம் என்பது ஆறறிவு படைத்த மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைக் கோட்பாடு என்பதால்.
இந்தியாவில்தான் மிக அதிகமான பேர் நடுத்தர வயதிலேயே இதயக் கோளாறுக்கு ஆட்படுகிறார்கள். அதற்குக் காரணம் பரவலாக மாறிவிட்டிருக்கும் புலால் உணவுப் பழக்கம் என்கின்றன ஆய்வுகள். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே புலால் உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துகிற பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளுக்கு நடுத்தர வயதிலேயே இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரேயடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக புலால் மறுத்தலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். தமிழினத்தின் வழிகாட்டிகளான வள்ளுவப் பேராசானையும், அருட் பிரகாச வள்ளலாரையும் நாம் போற்றினால் மட்டும் போதாது. பின்பற்றவும் வேண்டும் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com