புதிய 21 அரசுக் கல்லூரிகளில் அறிவியல் பாடப் பிரிவுகள் இல்லை: மாணவர்கள் ஏமாற்றம்

அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 21 அரசுக் கலைக் கல்லூரிகளில் அறிவியல் பாடப் பிரிவுகள்
புதிய 21 அரசுக் கல்லூரிகளில் அறிவியல் பாடப் பிரிவுகள் இல்லை: மாணவர்கள் ஏமாற்றம்

அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 21 அரசுக் கலைக் கல்லூரிகளில் அறிவியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2013-14 ஆம் ஆண்டு 12 கல்லூரிகள், 2014-15 இல் 2 கல்லூரிகள், 2015-16 இல் ஒரு கல்லூரி, 2016-17 ஆம் ஆண்டில் 6 கல்லூரிகள் என கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 21 அரசு கலைக் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டன.
இந்தக் கல்லூரிகள் அனைத்திலும் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப் பிரிவுகள் மட்டுமே உள்ளன.
ஆனால், ஆண்டுக்கு ஆண்டு இந்தக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கல்வியாண்டில் இது மும்மடங்காக உயர்ந்திருப்பதாக கல்லூரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக மயிலாடுதுரை மணல்மேடு பகுதியில் தொடங்கப்பட்ட அரசுக் கலைக் கல்லூரியில் இந்த 5 பாடப் பிரிவுகளில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இம்முறை இதற்கு 750 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதுபோல சிவகாசி அரசுக் கல்லூரியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு, 1,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
ஒசூர் அரசுக் கல்லூரியில் 250 இடங்களுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்தக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல் பிரிவுக்கு விருப்பம் தெரிவித்ததாகவும் அந்தப் பிரிவு இல்லாத காரணத்தால் பி.எஸ்சி. கணிதம், பி.ஏ. ஆங்கிலம் பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இயக்குநர் அலுவலகத்துக்கு பரிந்துரை: இதுகுறித்து மணல்மேடு அரசுக் கல்லூரி முதல்வர் சிவராமன், ஓசூர் கல்லூரி முதல்வர் காளிதாஸ் மற்றும் வேப்பந்தட்டை, திருவாடானை, கடாலடி, முதுகுளத்தூர், பேராவூரணி அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் கூறியது:
பொறியியல் படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோரும், மாணவர்களும் அடிப்படை அறிவியல் படிப்புகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால், புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த 21 கல்லூரிகளிலும் அறிவியல் பிரிவு பட்டப் படிப்புகள் இல்லாததால், அந்தப் பகுதி மக்கள் மிகுந்த ஏமாற்றமடைகின்றனர். அவர்கள் தனியார் கல்லூரிகளைத் தேடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. பிற ஏழை மாணவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த முடியாது என்பதால், அரசுக் கல்லூரியிலேயே பி.ஏ. ஆங்கிலம், பி.காம். படிப்புகளில் சேர்ந்துவிடுகின்றனர்.
மாணவர்களின் ஆர்வம் அதிகமுள்ள காரணத்தால், 2013-14 ஆண்டிலிருந்து புதிதாகத் தொடங்கப்பட்ட 21 கல்லூரிகளிலும் அடிப்படை அறிவியல் பாடப் பிரிவுகளைத் தொடங்க அனுமதிக்க வேண்டி கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம்.
இப்போது அனுமதி அளித்தால்கூட, ஏற்கெனவே பெறப்பட்டிருக்கும் விண்ணப்பங்களைக் கொண்டு சேர்க்கையை நடத்த முடியும்.
அதோடு, ஆய்வகத்துக்கான கட்டட வசதிகள் இந்தக் கல்லூரிகளில் போதுமான அளவு உள்ளன. ஆய்வக உபகரணங்களும், உதவியாளரும்தான் தேவை. தாற்காலிகமாக கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு பாடங்களை நடத்திவிட முடியும் என்றனர்.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா கூறியது:
அறிவியல் பட்டப் படிப்புகள் தொடங்க அனுமதி கோரி 21 புதிய கல்லூரிகளிடமிருந்தும் பரிந்துரைகள் வந்துள்ளன. அதனடிப்படையில், தமிழக அரசுக்கு இயக்குநரகம் சார்பில் பரிந்துரைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
அரசு ஆணை பிறப்பித்தால், இந்தக் கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் படிப்புகள் தொடங்கிவிட முடியும் என்றார்.
ஆய்வுக்குப் பிறகு அனுமதி: இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது:
புதிய அரசுக் கல்லூரிகளில் அறிவியல் பாடப் பிரிவுகளைத் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. ஆய்வக வசதி, போதிய பேராசிரியர்கள் என உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்.
கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை, அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து ஆராய்ந்து வருகிறோம்.
இந்த ஆய்வின் அடிப்படையில், தேவையை உணர்ந்து புதிய பாடப் பிரிவுகள் தொடங்க அரசுக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
அதே நேரம், புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்குவது தொடர்பாக கல்லூரிகள் சார்பிலும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com