செங்கம், உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இடி தாக்கி 7 பேர் சாவு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு நவீன அரிசி ஆலை மீது இடி விழுந்ததில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இடி தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்தனர்.
தளவாநாயக்கன்பேட்டை நவீன அரிசி ஆலையில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்.
தளவாநாயக்கன்பேட்டை நவீன அரிசி ஆலையில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு நவீன அரிசி ஆலை மீது இடி விழுந்ததில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இடி தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்டது தளவாநாயக்கன்பேட்டை பகுதி. இங்கு, செங்கம் நகர திமுக செயலர் சாதிக்பாஷாவுக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இதில், இரவு நேரப் பணியில் வெள்ளிக்கிழமை பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இரவு 7.45 மணியளவில் செங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, அரிசி ஆலை மீதும் இடி தாக்கியது. இதில் புதிதாகக் கட்டப்பட்ட அரிசி ஆலையின் புகைக்கூண்டு பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது.
அப்போது, மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி, மரண ஓலமிட்டனர். இந்த சம்பவத்தைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து செங்கம் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர். போலீஸார் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.
5 பெண் தொழிலாளர்கள் சாவு: இடிபாடுகளில் சிக்கிய செங்கத்தை அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டையன் மனைவி ரேணு (50), சொர்ப்பணந்தல் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மனைவி குமுதா (31), குப்புசாமி மனைவி ஆண்டாள் (55), கோபு மனைவி ஆரவள்ளி (40), முனியன் மனைவி செல்வி (40) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
2 பேர் பலத்த காயம்: பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த கோபி மனைவி குப்பம்மாள் (30), அருளப்பன் மனைவி இருதயமேரி (45) ஆகியோர் செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், அவர்கள் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து செங்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகள் விசாரணை: இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, டிஎஸ்பி ஷாஜிதா, வட்டாட்சியர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
உளுந்தூர்பேட்டை அருகே இருவர் பலி: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மீது இடி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம், களத்தூரைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி மகன் மணிகண்டன் (22), சங்குவேல் மகன் திருஞானவேல் (14), ராஜலிங்கம் மகன் சுரேஷ் (21), பழனிச்சாமி மகன்கள் தரணிதரன் (13), துதிர்வேல் (10). இவர்கள் உள்ளிட்ட மாணவர்கள், இளைஞர்கள் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, மின்னலுடன் கூடிய இடி மாணவர்களை தாக்கியது. இதில் மணிகண்டன், திருஞானவேல் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் திருஞானவேல் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
மேலும், இடி-மின்னல் தாக்கியதில் காயமடைந்து மயங்கிய சுரேஷ், தரணிதரன், துதிர்வேல் ஆகியோர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com