தமிழகத்தில் 86.18 லட்சம் மின்னணு அட்டைகள் விநியோகம்: அமைச்சர் ஆர்.காமராஜ்

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 86.18 லட்சம் மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டுள்ளதாக, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 86.18 லட்சம் மின்னணு அட்டைகள் விநியோகம்: அமைச்சர் ஆர்.காமராஜ்

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 86.18 லட்சம் மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டுள்ளதாக, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
கோவையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலமாகப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் முழு கணினிமயமாக்கல் பணிகளின் முன்னேற்றம் குறித்து கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் கிடைக்க வேண்டிய பொருள்கள் சரியாகக் கிடைப்பதுடன், அதன் இருப்பு விவரம் குறித்து தெரிந்து கொள்ளவும், கிடங்கில் இருந்து விற்பனை நிலையத்துக்கு வருகின்ற வரை பொருள்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடு தற்போது கணினிமயமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான மின்னணு அட்டைகள் பெற்ற பின்னர், அதில் மாற்றங்கள் செய்ய வேண்டுமானால் செல்லிடப்பேசி செயலி, பொதுமக்களுக்கான வலைதளம் மூலமாகவும் உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் செய்து கொள்ளலாம்.
மாற்றங்கள் செய்தபின் மின்னணு அட்டையை அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள 86 லட்சத்து 18 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தமுள்ள ஒரு கோடியே 90 லட்சத்து 80 ஆயிரத்து 693 அட்டைகளில், ஒரு கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 615 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விவரங்கள் முழுமையாகவும், 51 லட்சத்து 59 ஆயிரத்து 482 அட்டைகளுக்குப் பகுதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 596 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விவரங்கள் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 9.50 லட்சம் குடும்ப அட்டைகளில் 3.53 லட்சம் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரேஷன் அரிசி கடத்தியதாக கடந்த 6 ஆண்டுகளில் 972 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் (பொறுப்பு) கே.கோபால், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com