வீட்டுக்கடன் பெறுவதற்கு மனை வணிக ஒழுங்குமுறை ஆணைய தடையில்லாச் சான்று அவசியம்

வீட்டுக்கடன் வழங்குவதற்கு மனை வணிக ஒழுங்குமுறை ஆணைய தடையில்லாச் சான்றை அவசியமாக்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
வீட்டுக்கடன் பெறுவதற்கு மனை வணிக ஒழுங்குமுறை ஆணைய தடையில்லாச் சான்று அவசியம்

வீட்டுக்கடன் வழங்குவதற்கு மனை வணிக ஒழுங்குமுறை ஆணைய தடையில்லாச் சான்றை அவசியமாக்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
கட்டுமான வணிக விற்பனையில் ஏற்படும் மோசடிகளைத் தடுப்பதற்கென நாடு முழுவதும் மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டிலிருந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது யூனியன் பிரதேசங்கள், 13 மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
விரைவில் தமிழகத்திலும்..: தமிழக சட்டப்பேரவையிலும் விரைவில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, மனை வணிக ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றும் விதமாக ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
வங்கிகளின் வெளிப்படைத்தன்மை: வீட்டுக் கடன் பெறுவதற்கு, உரிய சான்றுகளுடன் வங்கிகளில் விண்ணப்பிக்கவேண்டும். சில விதிமீறல் இருந்தாலும் மேம்பாட்டாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு வங்கிகள் சாதகமாகவே செயல்படுகின்றன. இதற்கு, மௌலிவாக்கம் உள்ளிட்ட அடுக்குமாடிக் கட்டட விபத்துகளே முக்கியச் சான்றாக உள்ளது. இதுபோன்ற நடைமுறைப் பிரச்னைகளைத் தடுப்பதற்கு வங்கிகளின் நிலைப்பாட்டில் வெளிப்படைத்தன்மை வேண்டும். அவ்வாறு உள்ள கட்டுமானங்களுக்கு மட்டுமே வீட்டுக்கடன் தரவேண்டும் என்பதே கட்டுமான நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
வீட்டுக் கடனுக்கு வங்கிகளின் முடிவு?: வீட்டுக்கடன் வழங்குவதற்கு இனி வரும் காலங்களில் மனை வணிக ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து வாடிக்கையாளர்கள் தடையில்லாச் சான்று பெற்றால் மட்டுமே வீட்டுக்கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து வங்கிகளிலும் இதேபோன்ற நடைமுறையைப் பின்பற்றலாம் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடையில்லாச் சான்று: ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து பெறப்படும் பட்டியலைக்கொண்டு, எந்தெந்த வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கவேண்டும் என வங்கிகள் அறிவுறுத்தப்பட உள்ளது. இதில், கட்டுமான மேம்பாட்டாளர்கள் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, கட்டுமானக் காப்பீடு, முறையான திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்பிறகே, வீட்டுக்கடன் வழங்க வேண்டும் எனும் நடைமுறை வரவுள்ளது.
இதுகுறித்து கட்டுமான நிபுணர்கள், மேம்பாட்டாளர்கள் கூறியதாவது: வங்கிகளின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அதோடு, வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கிடையே வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும். மேலும், விதிமீறல் பிரச்னைகளுக்கு வங்கிகளின் இந்த நிலைப்பாடு தீர்வு காணும் வகையில் அமையும் என்றனர்.
இதுகுறித்து வீட்டுக்கடன் பெற்ற வங்கி வாடிக்கையாளர் மணிகண்டன் கூறியது: இது போன்ற நடைமுறை முன்பே இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இருந்திருந்தால், மௌலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போதே விதிமீறல் தொடர்பான விஷயங்களை அறிந்து, வங்கிகள் வீட்டுக்கடனை நிராகரித்திருக்கும் என்றார்.


வங்கிக்கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்!

கட்டுமான நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், ஒரு பட்டயக் கணக்காளரைத் கொண்டு, ஆறு மாதங்களுக்குள் தனது கணக்குகளைத் தணிக்கை செய்திருக்கவேண்டும்.
அதுபோல், வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் கட்டுமானத் திட்டங்களில் முறையான துறை அதிகாரிகளின் அனுமதி, அங்கீகாரம் ஆகியவை பெறப்பட்டுள்ளதா என்ற விவரங்களை வங்கி அதிகாரிகள் கட்டாயம் சரி பார்க்கவேண்டும்.
மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, கட்டுமான மேம்பாட்டாளர் திட்ட மதிப்பீட்டுத் தொகையினை (70 சதவீதம்) செலுத்தியுள்ளனரா எனவும் கண்காணிக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் திருத்தங்கள், சேர்த்தல், கட்டுமானத் திட்ட தள அமைப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்த பின்னரே வங்கிகடன் வழங்க வேண்டும் எனவங்கி ஊழியர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com