தனியார் கலப்பட பால் விற்பனை - தடை வருமா?

இந்தியாவில் 60 சதவீத பால் விற்பனை கலப்படத்துடன் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன...
தனியார் கலப்பட பால் விற்பனை - தடை வருமா?

2016ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால் பண்ணைகளிலிருந்து சுமார் 780 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5 சதவீதமாகும்.

இன்றைய சூழலில், உலக பால் உற்பத்தி வளர்ச்சி 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அதன் வளர்ச்சி 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள மொத்த கால்நடைகளில் 15 சதவீதம் இந்தியாவில் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

1991ஆம் ஆண்டு தனிநபருக்கு நாள் ஒன்றுக்கு கிடைத்த பாலின் அளவு 176 கிராம். இது 2014-15ஆம் ஆண்டு 322 கிராமாக அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டு உலக சராசரியான 294 கிராமைவிட அதிகமாகும். பால் மற்றும் பால் பொருள் உற்பத்தியில் தொடர்ந்து வளர்ச்சி காணப்படுவதை இது எடுத்துரைக்கிறது.

கிராமப்புறங்களில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதில் பால் பண்ணை முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது. பால் சேகரிப்பு, எடுத்துச் செல்லுதல், பதப்படுத்துதல், விநியோகம் ஆகிய பணிகளை கூட்டுறவு முறையில் ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்துவதன் மூலம் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. மிகையான பாலை பால் பவுடர். பால் பொருள்களாக மாற்றுவதன் வாயிலாக பருவ மாற்றத்தின் போது ஏற்படும் குறைபாட்டை சரிக்கட்டுவதற்கு வழிவகுக்கிறது.

தமிழக நிலவரம்: தமிழகத்தில் 1958இல் பால் வளத்துறை தொடங்கப்பட்டது. 1.2.1981 முதல் தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் இணையம் தொடங்கப்பட்டு, ஆவின் நிறுவனம் என்ற பெயரில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 190 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில், 50 சதவீதம் உற்பத்தியாளர்களது சுய தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 95 லட்சம் லிட்டர் சந்தைக்கு வருகிறது. உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. 23 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர். சென்னை மாநகரில் மட்டும் நாளொன்றுக்கு 11.22 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. 17 ஒன்றியங்களை உள்ளடக்கிய சென்னையைத் தவிர இதர மாவட்டங்களில் நாளொன்றுக்கு 9.29 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. 2015-16ஆம் ஆண்டில் மட்டும் பால் மற்றும் பால் பொருள்கள் மூலம் அரசுக்கு ரூ.5,017.29 கோடி விற்பனை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தனியார் தலையீடு: தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் மாநிலத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில், தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் பால் நிறுவனங்கள் தலையீடு அதிகரித்தது. இன்றைய சூழலில், ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் விற்பனை செய்தால், தனியார் நிறுவனங்கள் 75 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்யும் நிலையில் உள்ளன. இதனால், பால் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்கள் சேர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி குற்றம் சுமத்துகிறார்.

பாலில் கலப்படம் எப்படி?: இந்தியாவில் 60 சதவீத பால் விற்பனை கலப்படத்துடன் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பாலில் தண்ணீர் மட்டுமல்லாது யூரியா, ரசாயன பொருள்கள், சிந்தடிக் பால் ஆகியவையும் கலப்படம் செய்யப்படுகிறது என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பவுடர், மாவு கலப்பு: பாலில் பவுடர் கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிய பாலை நன்றாக 2 மணி நேரத்துக்கு மேல் காய்ச்ச வேண்டும். அப்போது, பாலானது மெதுவான கிரீம் போல வந்தால் அது சுத்தமானதாகும். கல் போல கடினத்தன்மையுடன் இருந்தால் பவுடர் கலந்த பாலாகும். இதேபோல, பாலில் மாவு கலக்கப்பட்டிருப்பதை கண்டறிய சிறிதளவு உப்பு கலக்க வேண்டும். அப்போது நீல நிற வட்டங்கள் தோன்றினால் மாவு கலந்த பாலாகும். நீல நிற வட்டம் இல்லையெனில் சுத்தமான பால்.

சிந்தடிக் பால்: பாலில் ரசாயன பொருள்கள் கலக்கப்பட்டிருந்தால் அதன் ருசியை வைத்து கண்டறிய முடியும். கைகளில் ஊற்றி தேய்த்தால் சோப்பு நுரை போல வரும். இத்தகைய பாலை சூடுபடுத்தினால் மஞ்சள் நிறத்துக்கு மாறக் கூடும். இவை சிந்தடிக் பால் என்பதை உறுதி செய்யலாம்.

யூரியா கலப்பு: பாலை நீண்ட நாள்களுக்கு பதப்படுத்தி வைத்திருக்கவும், பாலின் ருசி மாறாமல் இருக்கவும் யூரியா கலக்கப்படுகிறது. யூரியா கலந்த பாலை கண்டறிய அந்தப் பாலில் சோயா பீன்ஸ் பவுடரை கலக்க வேண்டும். பின்னர், அதில் லிட்மஸ் பேப்பரை தோய்த்து எடுத்தால் சிவப்பு நிறத்தில் மாறும். சிவப்பு நிறம் வந்தால் யூரியா கலந்த பாலாகும்.

பார்மலின் கலப்பு: பாலில் பார்மலின் கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய கந்தக அமிலத்தை கலக்க வேண்டும். அப்போது, நீல நிற வட்டங்கள் தோன்றினால் பார்மலின் இருப்பது உறுதியாகும்.

இதுமட்டுமல்லாது, பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சோடியம் கார்பனேட், சோடியம் ஹைட்ராக்ûஸடு, பால்மால் டிஹைடு, ஹைட்ரஜன் பெராக்ûஸடு உள்ளிட்ட பல்வேறு வேதிப் பொருள்கள் கலக்கப்படுகின்றன. அதிக நுரை வர வேண்டும் என்பதற்காக டிடர்ஜென்ட் ஆயில், வாஷிங் சோடா ஆகியவையும் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது.

பாதிப்புகள் என்ன?: யூரியா மற்றும் ரசாயனம் கலந்த பாலை அருந்தினால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பொருளாக உள்ளதால், அனைவருக்கும் முதலில் உணவுக் குழாய் பாதையில் புண்கள் ஏற்படும். ஆட்டிசம் என அழைக்கப்படும் நோய்க்கு கி1 ரக பால் காரணமாக இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. பார்மலின் என்பது, இறந்து போன மனித உடல்களை பராமரிக்க பயன்படுத்தும் ரசாயனம் ஆகும். இதைத் தொடர்ந்து பருகும் நபர்களுக்கு அலர்ஜி, வயிற்றுப் போக்கு, தோல் நோய், குறைந்த ரத்த அழுத்தம், கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரகப் பாதிப்பு ஆகியவையும் ஏற்படக்கூடும்.

அதீத கலப்படம் உள்ள பாலானது இருபாலருக்கும் மலட்டுத்தனம், பாலியல் குறைபாடுகளை ஏற்படுத்துவதுடன் பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பப்பை, பால் சுரப்பு கோளாறுகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com