தேனி மாவட்டத்தில் 36 ஆண்டுகளாக வனத்துறை அனுமதிக்கு காத்திருக்கும் கேரள இணைப்புச் சாலை

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் டி.மேட்டுப்பட்டி-சாக்குலத்துமெட்டு இணைப்புச் சாலைக்கு அடிக்கல் நாட்டி 36 ஆண்டுகளாகியும், வனத்துறை அனுமதி அளிக்காததால் பணிகள் முழுமையடையாமல்
தேனி மாவட்டத்தில் 36 ஆண்டுகளாக வனத்துறை அனுமதிக்கு காத்திருக்கும் கேரள இணைப்புச் சாலை

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் டி.மேட்டுப்பட்டி-சாக்குலத்துமெட்டு இணைப்புச் சாலைக்கு அடிக்கல் நாட்டி 36 ஆண்டுகளாகியும், வனத்துறை அனுமதி அளிக்காததால் பணிகள் முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே டி.மேட்டுப்பட்டியில் இருந்து சாக்குலத்து மெட்டு வழியாக 11 கி.மீ. தூரத்தில் கேரளப் பகுதிக்குச் செல்ல பாதை வசதி உள்ளது.
இந்த டி.மேட்டுப்பட்டி- சாக்கலத்துமெட்டு இணைப்புச் சாலை திட்டத்துக்கு கடந்த 1981-ம் ஆண்டு, அப்போதைய நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ப.குழந்தைவேலு (அதிமுக) டி.மேட்டுப்பட்டியில் அடிக்கல் நாட்டினார். தற்போது இச்சாலை முழுமையாக அமைக்கப்பட்டால் தேவாரத்தில் இருந்து 60 கி.மீ. தூரம் பயணித்து கேரளப் பகுதிகளுக்குச் செல்வோர், டி.மேட்டுப்பட்டி- சாக்குலத்துமெட்டு சாலை வழியாக 11 கி.மீ. தூரத்திலேயே மூணாறு மற்றும் கேரளப் பகுதிகளுக்குச் சென்று விடலாம்.
இத்திட்டத்தில், டி.மேட்டுப்பட்டியில் இருந்து 6 கி.மீ. தூரம் வரை வருவாய்த் துறை நிலத்தில் சாலை அமைக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது. எஞ்சியுள்ள 5 கி.மீ. தூரச் சாலைக்கான இடம் தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடத்தில் சாலை அமைக்க தற்போது வரை வனத்துறை அனுமதி வழங்காததால், பணிகள் முழுமையடையாமல் உள்ளன.
இதுகுறித்து கோம்பை 18-ஆம் கால்வாய் விவசாயிகள் சங்கச் செயலர் ஏ.திருப்பதிவாசன் கூறியது: டி.மேட்டுப்பட்டி- சாக்குலத்துமெட்டு இணைப்புச் சாலை திட்டத்தை தமிழக வனத்துறை அமைச்கம் ஏற்றுக் கொண்டு கடந்த 2007-ஆம் ஆண்டு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில், இணைப்புச் சாலை திட்டத்துக்கு வனப்பாதுகாப்புச் சட்டம் 1980-ன் கீழ் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று அனுமதி அளிக்கப்படும் என்று கடந்த 2008-ஆம் ஆண்டு அப்போதைய சென்னை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சி.கே.ஸ்ரீதரன் தெரிவித்திருந்தார்.
ஆனால், மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால், கடந்த 36 ஆண்டுகளாக இணைப்புச் சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி, டி.மேட்டுப்பட்டி-சாக்குலத்துமெட்டு இணைப்புச் சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com