நீட் தேர்வு முடிவுக்கு தடை: தாமதமாகுமா மருத்துவ மாணவர் சேர்க்கை?

"நீட்' தேர்வு முடிவை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

"நீட்' தேர்வு முடிவை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் பொதுத் தேர்வு மே 7 -ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 88 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
இந்நிலையில், இந்தத் தேர்வை ஆங்கிலத்தில் எழுதியவர்களுக்கும், பிற மொழிகளில் எழுதியவர்களுக்குமான வினாத்தாள்களில் வேறுபாடு உள்ளது.
எனவே, நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்வு முடிவை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணை ஜூன் 7 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிவுக்கு பின்பு விண்ணப்பம்: தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு வரை, மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கிய பின்பே, பொறியியல், கால்நடை மருத்துவம், இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பொறியியல், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கிவிட்டது. இவற்றில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நாள்களில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைக்கும் நிலையில், பலர் பொறியியல் கல்லூரி இடங்களை கைவிட வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
நீட் கட்டாயம்: இந்த ஆண்டில் இருந்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் ஜூன் 7 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற தடை நீக்கப்பட்டு அன்றைய தினமே (ஜூன் 7) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டாலும், அதற்கு பின்பு விண்ணப்ப விநியோகம் தொடங்கி, தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்படும்.
செப்டம்பர் 30 கடைசி: இதுதொடர்பாக தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது:
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் கலந்தாய்வை நிறைவு செய்வதற்கு செப்டம்பர் 30 கடைசி தேதியாகும். இந்த முறை, நடைமுறைகளில் ஏதேனும் மாறுபாடு இருந்தால், தேதி மாற்றம் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடும். அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார்.
புதிய குழப்பங்கள்: நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்த நடைமுறை புதியது. இதனால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழக்கூடும்.
மேலும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அரசு இடங்களுடன், தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் அந்தந்த மாநில அரசே நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறுகையில், "முதுநிலை மாணவர் சேர்க்கையில் குறைவான இடங்களே உள்ளன.
இதனால் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது எளிது. ஆனால் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பொருத்தவரை, ஒரு கல்லூரியில் 150 இடங்கள் வரை இருக்கலாம். அனைத்து இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது எளிதானது இல்லை. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எவ்வித வழிகாட்டுதல்களும் வரவில்லை' என்றார் அவர்.
வகுப்புகள் தாமதிக்கும்: நீட் தேர்வு விவகாரத்தால் மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்படும் நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்குவதும் தாமதமாகும் என்று மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com