முறைகேடுகளால் முடங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள்

நிர்வாகக் குழுவினாலும், பணியாளர்களாலும் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை லாபத்தில் இயங்கிய பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்

நிர்வாகக் குழுவினாலும், பணியாளர்களாலும் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை லாபத்தில் இயங்கிய பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தற்போது முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 4,413 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. 2000 ஆண்டுக்கு முன்னர் சுமார் 5,000 என்ற எண்ணிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 600 சங்கங்கள் மூடப்பட்டுவிட்டன.
கூட்டுறவு அமைப்பின் முக்கிய அம்சமே சுயாட்சி மற்றும் சுதந்திரம். அது அரசாலும், அதிகாரிகளாலும் பறிக்கப்பட்டு, அரசியல் தலையீடு அதிகரித்ததால், வீழ்ச்சியடையத் தொடங்கின.
அரசு தலையீட்டால் வீழ்ந்த கூட்டுறவு: சுயமாக இயங்கிய கூட்டுறவுச் சங்கங்கள் ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, கிராமக் கடன் அளவீட்டுக் குழு அமைக்கப்பட்டது. சங்கங்களில் கடன்பெறும் தகுதியை அதிகரிக்க அரசு பங்குகளை முதலீடு செய்ய வேண்டும் என அக் குழு பரிந்துரைத்தது.
இதுதான் அரசு அதிகாரம் கூட்டுறவில் குறுக்கீடு செய்ய முதல் காரணம். அரசு முதலீடும், அதிகாரிகளின் குறுக்கீடும் வந்ததால், 1976-இல் மக்களாட்சி நிர்வாகம் அதிரடியாக கலைக்கப்பட்டது. பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு 1996-இல்தான் தேர்தல் நடந்தது. பின்னர், 2001-இல் கலைக்கப்பட்டு 2013-இல் மீண்டும் தேர்தல் நடந்தது. தற்போது சுமார் 100 சங்கங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.
நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை புனரமைக்க மத்திய அரசின் நிதித் துறை சார்பில், பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
செயல்பாட்டுக்கு வராத வைத்தியநாதன் குழு பரிந்துரை: அந்தக் குழு கடந்த 4.2.2005-இல் அளித்த அறிக்கையில், அரசியல் குறுக்கீடு கூடாது. சுதந்திரமான தேர்தல் நடத்தி நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அடங்கியிருந்தன. மேலும், சங்கங்களின் இழப்பு குறித்து சிறப்பு தணிக்கை செய்து, விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவற்றால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசும், பொது விநியோகம் போன்ற திட்டங்களால் ஏற்பட்ட இழப்பை தமிழக அரசும், ஊழல் நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பை அந்தந்தச் சங்கங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி, மாநில அரசு ஆகியவை 3.1.2008-இல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன. சிறப்பு தணிக்கை மூலம் கணக்கிடப்பட்ட புனர்வாழ்வு நிதி ரூ.1,600 கோடியில் 75 சதவீதத்தை முன்னதாகவும், 25 சதவீதத்தை நிர்வாகிகள் தேர்தலுக்கு பின்னும் சங்கங்களுக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
நஷ்டத்தை ஏற்படுத்திய கடன் தள்ளுபடி: 2006-2011 திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.6,800 கோடி விவசாயக் கடனை 5 தவணைகளில் 8 சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறப்பட்டது. ஆனால், இன்னமும் பல சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ரூ.5,800 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தொகையில் பாதி அளவு கூட கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு இன்னும் வழங்கவில்லை.
அடிக்கடி நிர்வாகத்தைக் கலைத்து அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சங்கங்களைக் கொண்டு வந்தது, நிர்வாகக் குழுவின் முறைகேடுகள், தள்ளுபடி மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தும் மனநிலையைச் சீரழித்தது, சட்டப்படியான கடன் வசூலுக்குத் தடை விதித்தது போன்றவற்றை கூட்டுறவுச் சங்கங்களின் வீழ்ச்சிக்குக் காரணங்களாகப் பட்டியலிடப்படுகின்றன.
சங்கத்துக்குக் கொடுக்கும் கடனுக்கு மத்திய கூட்டுறவு வங்கி மாதந்தோறும் வட்டி வசூலிக்கிறது. சங்கமோ ஆண்டுக்காண்டு மட்டும் வட்டியைக் கணிக்கிறது. இதனால் அதிக நஷ்டத்தை சங்கம் சந்திக்கிறது.
கை கொடுக்காத பொது விநியோகத் திட்டம்: இதற்காக அரசு வழங்கும் கமிஷன் தொகை 16 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. 1 கிலோ அரிசிக்கு 45 பைசா, துவரம் பருப்புக்கு 50 பைசா, 1 லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 18 பைசாதான் இதுவரை கொடுக்கப்படுகிறது.
பொது விநியோகத் திட்டத்துக்கான செலவுத் தொகையை மானியமாக அரசு திருப்பி வழங்குகிறது. ஆனால், கடுமையாக தணிக்கை செய்து கணக்கு அனுப்பினாலும், 51 அல்லது 52 சதவீதத் தொகையையே மானியமாக அரசு வழங்குகிறது. வாடகை, ஊழியர் ஊதியம், கூலி என பலவிதச் செலவுகள், பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், பொது விநியோகத் திட்டம் மூலமான இழப்பையும் சேர்த்து சுமக்கும் நிலைக்கு சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவுச் சங்க ஊழியர் எம்.கிருஷ்ணகுமார் கூறியது:
தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் இயல்பு நிலைக்கு வர, கடன் தள்ளுபடிக்கு பிறகு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக ஒரே தவணையில் வழங்க வேண்டும்.
சங்கங்களின் பொருளாதார நிலையை உயர்த்த அந்தப் பகுதிகளில் உள்ள வாய்ப்புகளுக்கு ஏற்ப பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்களை நடத்த அனுமதி, திருமண மண்டபங்கள், சுற்றுலா வாகனங்களை வாடகைக்கு விடுதல், மெட்ரிக். பள்ளிகள், கலைக் கல்லூரிகள் நடத்துதல் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த நிதி உதவியை அரசு அளிக்க வேண்டும். இத்தகைய வாய்ப்புகளை கேரளம், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநில அரசுகள் அங்குள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளன என்றார்.
நிர்வாகக் குழுவின் தில்லுமுல்லுகளால் சிதையும் சங்கங்கள்: கடந்த 2001-ஆம் ஆண்டில் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு கலைக்கப்பட்ட பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 2013-இல் தான் புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தப்படாமலேயே ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே நிர்வாகக் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.
இருப்பினும், மக்கள் பிரதிநிதிகள் கையில் அதிகாரம் வந்துள்ளதால், சங்கங்கள் எழுச்சிபெறும் என கூட்டுறவு அமைப்புகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நிர்வாகக் குழுவின் கைப்பாவையாக மாற்றப்பட்டுள்ளன என கூட்டுறவுத் துறை கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்தது: கூட்டுறவுச் சங்கங்களில் நடத்தப்பட்ட தணிக்கைகளில் பயிரிடாத நிலத்தின் பேரில் பயிர்க் கடன், திருப்பிச் செலுத்தும் திறன் இல்லாத பலருக்கும் கடன், போலி நகைகளை வைத்து நகைக் கடன் என பல்வேறு வகையிலும் சங்கத்தின் கட்டமைப்பு பல இடங்களில் நிர்வாகக் குழுவால் சிதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்பட்டாலும், முறைகேடுகளுக்கு உண்டான இழப்பீடு திரும்பி அளிக்கப்பட்டு விடுவதால், அத்தகைய முறைகேடுகள் வெளியில் வருவதில்லை. ஆனால், முறைகேடுகள் அனைத்தும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.
முறைகேடுகளால் நிதி ஆதாரங்கள் படிப்படியாகக் கரைக்கப்பட்டதால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வரை லாபத்தில் இயங்கிய பல கூட்டுறவு சங்கங்கள், இப்போது பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன.
நிர்வாகக் குழுவுக்கு பொறுப்புணர்வு வேண்டும்: இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த கூட்டுறவாளர் ஆர்.மெய்ஞானமூர்த்தி கூறியது:
கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்பினர்களின் சொத்து என்ற எண்ணம் நிர்வாகக் குழுவுக்கு ஏற்பட வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதைப் போல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 6 மாதங்களுக்கு ஒருமுறை பொதுவெளியில் உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டி, சங்கத்தின் வரவு, செலவு அறிக்கையை உறுப்பினர்கள் பார்வைக்கு வைத்து விவாதித்து, ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com