‘மோரா’ புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நேற்று முன்தினம்  வங்க கடலில் உருவான ‘மோரா’ புயல் வங்கதேசம் நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு  ஆபத்து இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘மோரா’ புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை: நேற்று முன்தினம்  வங்க கடலில் உருவான ‘மோரா’ புயல் வங்கதேசம் நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு  ஆபத்து இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. பின்னர் நேற்று காலை  அது புயலாக மாறியது.இந்த புயலுக்கு ‘மோரா’ என பெயரிடப்பட்டுள்ளது.

மோரா புயலானது தற்பொழுது கிழக்கு மத்திய வங்க கடலில் மையம் கொண்டு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது கொல்கத்தாவுக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 750 கி.மீ. தொலைவிலும், வங்காளதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து 660 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30-ந்தேதி) பிற்பகலுக்கு மேல் சிட்டகாங் துறைமுகம் அருகே 'மோரா' கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அசாம், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகலாயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தற்பொழுது வங்கதேசம் நோக்கி நகர்ந்து வரும் 'மோரா' புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நாளை பிற்பகல் சமயம் அது கரையை கடக்கும். ஆனாலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மற்றும் பாம்பன் துறைமுகங்களில் இன்று  2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இந்த முறை தென்மேற்கு பருவமழையானது கொஞ்சம் முன்னதாக ஜுன் 30-ஆம் தேதி முதல் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com