சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எதிரொலி: ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் நடவடிக்கையை துவக்கிய மாநில அரசு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு... 
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எதிரொலி: ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் நடவடிக்கையை துவக்கிய மாநில அரசு!

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துவக்கியுள்ளது.

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறியது.

பின்னர் மேல்முறையீட்டில் கர்நாடக உயர் நீதின்றம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து, கடந்த  ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.  இந்நிலையில் ஜெயலலிதா கடந்த ஆண்டு மறைந்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயலலிதா இறந்தததால் அவர் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க அவரது சொத்துகளை முடக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு சொந்தமான தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 68 சொத்துகளை, பறிமுதல் செய்வதற்கான பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியது. இதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் சொத்துப் பறிமுதல் தொடர்பான முதற்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

இந்த சொத்துகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் பறிமுதல் செய்யப்பட்டடு உடனேயே அவை தமிழக அரசுக்கு சொந்தமானது என்று வருவாய் துறை அதிகாரிகளால் குறிப்பிட்ட இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நடவடிக்கை தொடர்பான விவகாரங்ககள் நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com