சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீ; புகை மூட்டத்தால் திணறும் தி.நகர்

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை பற்றிய தீ 10 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து வருகிறது.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீ; புகை மூட்டத்தால் திணறும் தி.நகர்

சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை பற்றிய தீ 10 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து வருகிறது.

பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு கட்டடத்தின் பின்பக்க சுவர் இடிக்கப்பட்டு அதன் வழியாகவும், நான்கு பக்கங்களில் இருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீணை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பல மணி நேரமாக தீ எரிவதால், தியாகராய நகர் பகுதி முழுவதுமே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. அவ்வழியாக செல்வோர் பெருத்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதுகாப்புக் கருதி, சென்னை சில்க்ஸ் கட்டத்துக்கு அருகே உள்ள பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டடத்துக்குள் புகை மூட்டம் இருப்பதால், கட்டத்துக்குள் செல்ல முடியாததால், சுவர்களையும், கண்ணாடிகளையும் உடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இன்று அதிகாலை, சென்னை சில்க்ஸ் துணிக் கடையின் கீழ் தளத்தில் பற்றிய தீ வேகமாக மேல் தளங்களுக்கும் பரவியது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கடைக்குள் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

துணிக் கடை என்பதால், தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கட்டடத்துக்குள் புகை மூட்டம் காணப்படுவதால் தீயணைப்பு வீரர்களும் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், கட்டடத்தின் உள் பகுதிகள் இடிந்து விழுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இன்னும் 4 மணி நேரத்தில் தீ முழுமையாக அணைக்கப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் கட்டடத்துக்கு அருகே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகே உள்ள கடைகளைத் திறக்கவும் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து நேரிட்ட பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

முதற்கட்ட விசாரணையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் அருகில் இருந்த டீசல் கேன் வெடித்து கடை முழுவதும் தீ பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். கட்டடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com