மஹிந்திரா சிட்டி இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் கழுத்து நெரித்துக் கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

மஹிந்திரா சிட்டி இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில்

சென்னை: மஹிந்திரா சிட்டி இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தளவாழப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளையராஜா செங்கல்பட்டு மஹிந்திரா சிட்டியில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமை இன்போசிஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்ற அவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. அவர் செல்ஃபோன் எண்ணுக்கு உறவினர்கள் தொடர்புகொண்டபோது, அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று மாலை இன்ஃபோசிஸ் நிறுவன கழிவறையில், இளையராஜா நிர்வாணமாகவும், மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வழிந்த நிலையிலும், சடலமாக மீட்கப்பட்டதாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இளையராஜா உடல்நிலை சரியில்லாமல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இளையராஜா குடும்பத்தினருக்கு அன்றிரவு இன்ஃபோசிஸ் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இளையராஜா சடலத்தை அலுவலகத்தில் இருந்து மீட்ட இன்போசிஸ் நிர்வாகத்தினர், தங்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே, போலீஸார் உதவியுடன் மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனையை முடித்துவிட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்களிடம் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், இளையராஜா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது

பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், இளையராஜாவை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com